பொட்டாஷ் ஏற்றுமதி மீதான தடைகளை நீக்கிய அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் மரியா கோல்ஸ்னிகோவா மற்றும் நோபல் பரிசு பெற்ற அலெஸ் பியாலியாட்ஸ்கி உட்பட 123 கைதிகளை பெலாரஸ் விடுவித்துள்ளது.
2022ஆம் ஆண்டு முதல் ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்து வருகிறது. ரஷ்யாவுக்கு ஆதரவாக பெலாரஸ் செயல்பட்டது. இதையடுத்து பெலாரஸும் அமெரிக்காவின் தடைகளை எதிர்கொண்டது. குறிப்பாக, பொட்டாஷ் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது. இது, உரங்களின் ஒரு முக்கிய அங்கமாக விளங்குகிறது. மேலும் பெலாரஸ் ஒரு முன்னணி உலகளாவிய உற்பத்தியாளராக உள்ளது. இன்னொரு புறம், எதிர்க்கட்சிகள் மற்றும் உரிமைக் குழுக்களின் கூற்றுப்படி, 2020 தேர்தல்களில் மோசடி செய்யப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட அதிபர் லுகாஷென்கோவை, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய இராஜ்ஜியம் ஆகியவை நாட்டின் சட்டப்பூர்வமாக அவரை அங்கீகரிக்கவில்லை. மேலும் நீண்டகால ஆட்சியாளரான அவரை தனிமைப்படுத்தினர். அப்போதுதான் தடைகளும் பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புடன் பெலாரஸ் நாட்டின் சிறப்புத் தூதர் ஜான் கோலுடன் மின்ஸ்கில் சமீபத்தில் பேச்சுவார்த்தை மேற்கொண்டார். இந்தப் பேச்சுவார்த்தையின்போது உர உற்பத்தியில் பயன்படுத்தப்படும் முக்கிய மூலப்பொருளும், பெலாரஸின் மிக முக்கியமான ஏற்றுமதிகளில் ஒன்றான பொட்டாஷ் மீதான தடைகளை நீக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டது. இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் மரியா கோல்ஸ்னிகோவா மற்றும் நோபல் பரிசு பெற்ற அலெஸ் பியாலியாட்ஸ்கி உட்பட 123 கைதிகளை பெலாரஸ் விடுவித்துள்ளது. மரியா கோல்ஸ்னிகோவா 2020 முதல் சிறையில் இருந்து வருகிறார். விடுவிக்கப்பட்ட கைதிகளில் 9 பேர் பெலாரஸிலிருந்து லிதுவேனியாவுக்குச் சென்றனர். அதில், அலெஸ் பியாலியாட்ஸ்கியும் ஒருவர். 2022 அமைதிக்கான நோபல் பரிசை வென்ற பியாலியாட்ஸ்கி, 2021 முதல் சிறையில் இருந்து வருகிறார். இதர 114 பேர் உக்ரைனுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போர்க் கைதிகளை நடத்துவதற்கான உக்ரைனின் ஒருங்கிணைப்புத் தலைமையகத்தின்படி, விடுவிக்கப்பட்ட கைதிகளுடன் மரியா கோல்ஸ்னிகோவாவும் உக்ரைனிடம் ஒப்படைக்கப்பட்டார். இதுதவிர, வரும் மாதங்களில் எஞ்சியுள்ள கைதிகளும் விடுவிக்கப்படலாம் என தகவலகள் தெரிவிக்கின்றன.