அலெக்ஸாண்டர் லுகாஷென்கோ எக்ஸ் தளம்
உலகம்

பெலாரஸ் | நாளை தேர்தல்.. 7வது முறையாக அதிபர் ஆகிறார் அலெக்ஸாண்டர் லுகாஷென்கோ.. யார் இவர்?

பெலாரஸ் நாட்டின் நடப்பு அதிபர் தேர்தலிலும் 1994ஆம் ஆண்டுமுதல் ஆட்சி செய்துவரும் அலெக்ஸாண்டர் லுகாஷென்கோ அதிபராவார் எனக் கூறப்படுகிறது.

Prakash J

கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்று பெலாரஸ். இது, சோவியத் ரஷ்யாவில் இருந்து பிரிந்த நாடுகளில் ஒன்று. இதன் எல்லைகளாக ரஷ்யா, போலந்து, உக்ரைன் ஆகிய நாடுகள் உள்ளன.

இந்த நிலையில், பெலாரஸ் நாட்டின் அதிபர் தேர்தல் நாளை (ஜனவரி 26) நடைபெற உள்ளது. இதையடுத்து அதற்கான பணிகள் வேகம்பிடித்து வருகின்றன. எனினும், இந்தத் தேர்தலிலும் 1994ஆம் ஆண்டுமுதல் ஆட்சி செய்துவரும் அலெக்ஸாண்டர் லுகாஷென்கோ அதிபராவார் எனக் கூறப்படுகிறது. ஐரோப்பாவின் ’கடைசி சர்வாதிகாரி’ என்று வர்ணிக்கப்படும் இவர், இம்முறையும் வெற்றிபெற்று 7வது முறையாக அதிபராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் லுகாஷென்கோ 80 சதவிகித வாக்குகளை பெற்று வெற்றியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. அப்போது, அந்த தேர்தலில் மோசடி ஏற்பட்டுள்ளதாகக் கூறி அந்நாட்டு மக்கள் நாடு தழுவிய போராட்டங்களில் ஈடுபட்டனர். ஆனால், அந்த போராட்டத்தை லுகாஷென்கோ இரும்புக் கரங்களைக்கொண்டு அடக்கினார்.

அலெக்ஸாண்டர் லுகாஷென்கோ

மேலும், அந்த போராட்டத்தில் பங்குபெற்ற ஆயிரக்கணக்கான மக்கள் கைது செய்யப்பட்டதுடன், லுகாஷென்கோவின் முக்கிய எதிர்க்கட்சியினர் மற்றும் விமர்சகர்கள் நாடு கடத்தப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, தற்போது நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் லுகாஷென்கோவை எதிர்க்க முக்கிய அரசியவாதிகள் யாரும் இல்லாததினால் அவரே மீண்டும் அதிபராக தொடருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்த தேர்தலை பெலாரஸின் பெரும்பான்மையான மக்கள் புறக்கணிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

யார் இந்த அலெக்ஸாண்டர் லுகாஷென்கோ?

1954, ஆகஸ்ட் 30ஆம் தேதி பிறந்த அலெக்ஸாண்டர் லுகாஷென்கோ, 1975ஆம் ஆண்டு மொகிலெவ் கல்வியியல் நிறுவனத்தில் பட்டம் பெற்றார். 1982ஆம் ஆண்டு அரசுக்குச் சொந்தமான விவசாயப் பண்ணை ஒன்றில் பணியாற்றினார். 1990ஆம் ஆண்டு பெலாரஸ் உச்ச கவுன்சிலில் பணியாற்றினார். 1993ஆம் ஆண்டு நாடாளுமன்ற ஆணையத்தின் தலைவராகப் பதவியேற்று ஊழலை எதிர்த்துப் போராடினார். முன்னதாக அவர், சோவியத் ஒன்றியத்தில் இருந்து பெலாரஸ் பிரிவதற்கு எதிராக வாக்களித்த ஒரேயொரு அரசுப் பிரதிநிதியாவார்.

அலெக்ஸாண்டர் லுகாஷென்கோ

அதன்பின்னர், 1994ஆம் ஆண்டு முதல் பெலாரஸின் அதிபராக இருந்து வரும் அலெக்ஸாண்டர் லுகாஷென்கோ, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் நெருங்கிய கூட்டாளியாக அறியப்படுகிறார். கடந்த 2022 முதல் உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யாவுக்கு ஆதரவாக, அந்நாட்டுப் படைகளை தங்களது மண்ணில் தங்கியிருக்க அனுமதியளித்தவர். உக்ரைன் நாட்டின் தலைநகரான கீவ் நகரத்தை நோக்கி ரஷ்யப் படைகள் படைகள் நகர்ந்து செல்வதற்கும் உதவியவர் என இவர்மீது குற்றஞ்சாட்டப்படுகிறது.