ஐக்கிய அரபு அமீரகத்தில் ரமலான் மாதத்தையொட்டி, யாசகம் பெறுவதை கட்டுப்படுத்த நடைமுறைகளை அந்த நாடு கடுமையாக்கி வருகிறது. அதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கையும் எடுத்து வருகிறது. ஆனாலும் அரசுக்கு தெரியாமல் சிலர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இந்த நிலையில், ஷார்ஜா நகரில் ஒரு மசூதி அருகே ஒருவர் யாசகம் எடுப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, மசூதிக்குச் சென்ற காவல் துறையினர், தகவல் தெரிவிக்கப்பட்ட யாசகரைக் கைது செய்தனர். அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், கைது செய்யப்பட்டவர் சட்டவிரோதமாகக் குடியேறியவர் என்றும், வெறும் 3 நாள்களில் யாசகம் பெற்றதன் மூலம் ரூ.3.26 லட்சம் (14,000 திர்ஹாம்) சம்பாதித்ததும் தெரிய வந்தது.
முன்னதாக, கடந்த வாரம் துபாயில் 127 யாசகர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து ரூ.11.66 லட்சத்துக்கும் (50,000 திர்ஹாம்) அதிகமான தொகை பறிமுதல் செய்யப்பட்டது எனக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், இந்த ஆண்டு ரமலான் மாதத்தின் முதல் பாதியில் யாசகம் எடுப்பதைத் தடுக்கும் ஒரு பெரிய நடவடிக்கையில் ஷார்ஜா காவல்துறை 107 நபர்களைக் கைது செய்து, அவர்களிடமிருந்து 50,000 திர்ஹம்களுக்கு (ரூ.11.66 லட்சத்துக்கும்) மேல் பறிமுதல் செய்தது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில், யாசகம் பெறுபவர்களுக்கு 5,000 திர்ஹம்ஸ் அபராதம் மற்றும் மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது. யாசக கும்பல்களை இயக்குபவர்கள் 100,000 திர்ஹம்ஸ் வரை அபராதம் மற்றும் நீண்ட சிறைத்தண்டனை உட்பட கடுமையான தண்டனைகளை எதிர்கொள்கின்றனர். கைது செய்யப்பட்ட யாசகர்களில் 99 சதவீதம் பேர் யாசகம் எடுப்பதை ஒரு தொழிலாக கருதுவதாக துபாய் காவல்துறை தெரிவித்துள்ளது.