செய்தியாளர் - ராஜ்குமார்.ர
விமானப் பயணம் என்றாலே பலருக்கும் சொகுசான பயணம்தான் நினைவுக்கு வரும். இதற்காகப் பலரும் ஆயிரக்கணக்கில் பணம் செலுத்தி விமான டிக்கெட்டுகளைப் பெற்று பயணம் செய்கின்றனர். அப்படித்தான், ஆஸ்திரேலியாவின் குவாண்டாஸ் விமான நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம், சில தினங்களுக்கு முன்பு பெர்த் நகரிலிருந்து இத்தாலியின் ரோம் நகருக்குப் புறப்பட்டது.
சுமார் 17 மணி நேரம் நீடிக்கும் இந்த நீண்ட தூரப் பயணத்தின்போது, விமானத்தில் இருந்த சில பயணிகள் தங்களைப் பூச்சிகள் கடித்ததாகப் புகார் தெரிவித்துள்ளனர். இதனால், அவர்களுக்கு அரிப்பும் அசௌகரியமும் ஏற்பட்டது. மேலும், விமானத்தின் சில இருக்கைப் பகுதிகளில் மூட்டைப்பூச்சிகள் இருந்ததாகவும் பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதையடுத்து, பூச்சிக் கடியால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு விமானப் பணியாளர்கள் மருந்துகளை வழங்கியுள்ளனர். இருப்பினும், பயணிகளிடமிருந்து தொடர்ந்து புகார்கள் வந்துகொண்டே இருந்துள்ளன. விமானத்தில் இருந்த மருந்துகளும் தீர்ந்துபோன நிலையில், விமானம் இத்தாலியின் ரோம் நகரில் சென்றடைந்துள்ளது. விமானத்தை முழுமையாகச் சுத்தம் செய்வதற்காக அது அங்கேயே நிறுத்திவைக்கப்பட்டது. இதன் காரணமாக, பெர்த் நகருக்குத் திரும்பிச் செல்லவிருந்த விமானச் சேவையும் ரத்து செய்யப்பட்டது.
விமானச் சேவை ரத்து செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்ட பயணிகளிடம் குவாண்டாஸ் நிறுவனம் மன்னிப்புக் கோரியுள்ளது. மேலும், பயணிகளுக்குத் தங்குமிட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டதுடன், அவர்களின் அசல் புறப்பாட்டு நேரத்திலிருந்து 48 மணி நேரத்திற்குள் மாற்று விமானங்கள் மூலம் பயணம் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஏற்கெனவே, நீண்டதூர விமானப் பயணங்களின்போது பயணிகளுக்கு ஏற்படும் சிரமங்கள் குறித்து பல்வேறு புகார்கள் எழுந்துவரும் நிலையில், தற்போது மூட்டைப்பூச்சித் தொல்லையால் விமானச் சேவையே ரத்து செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.