கனடாவில் அக்டோபர் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அந்நாட்டின் பிரதமராக இருக்கும் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எதிராக எதிர்ப்புகள் கிளம்பின. இதனால், அவருக்கு ஆதரவு அளித்து வந்த என்.டி.பி. கட்சியும் தனது ஆதரவை விலக்கிக் கொண்டது. இதையடுத்து அவருக்கு நெருக்கடி அதிகரித்தது. மேலும், அவரது சொந்த லிபரல் கட்சிக்குள்ளேயே அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. இந்த நிலையில், லிபரல் கட்சியின் தலைவர் பதவியில் இருந்தும் பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்த ட்ரூடோ, கட்சித் தலைவர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். என்றாலும், அடுத்த பிரதமர் தேர்வு செய்யப்படும்வரை தொடர்ந்து பதவியில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அடுத்த தலைவரை தேர்வு செய்யும் பணியில் கட்சித் தலைமை ஈடுபட்டுள்ளது. கட்சித் தலைவராகும் நபர், இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் பொதுத் தேர்தலில், பிரதமர் வேட்பாளராக களம் காண்பார் என்பதால், அதற்கான தகுதி உள்ள நபரை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இந்தப் போட்டியில் பலர் உள்ளனர்.
அதில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த போக்குவரத்துத் துறை அமைச்சரான அனிதா ஆனந்த் பெயரும் பேசப்பட்டு வருகிறது. இவரைத் தவிர வெளியுறவுத் துறை அமைச்சர் மெலானி ஜோலி, முன்னாள் துணை பிரதமர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட், கனடா மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் மார்க் கார்னி, தொழில்துறை அமைச்சர் பிரான்காய்ஸ் மற்றும் பிரான்சுவா-பிலிப் ஷாம்பெயின்ஆகியோரும் போட்டியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
நோவா ஸ்கோடியாவின் கென்ட்வில்லில் பிறந்த அனிதா ஆனந்தின் பெற்றோர் (சரோஜ் டி.ராம் - எஸ்.வி.ஆனந்த்) இருவருமே மருத்துவர்கள். அனிதாவுக்கு கீதா மற்றும் சோனியா ஆனந்த் என்ற இரு சகோதரிகளும் உண்டு. அனிதா ஜான் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். அனிதா ஆனந்த் குயின்ஸ் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் இளங்கலைப் பட்டமும், ஆக்ஸ்போர்டு மற்றும் டல்ஹவுசி பல்கலைக்கழகங்களில் சட்டமும் முடித்துள்ளார். டொராண்டோ பல்கலைக்கழகத்தில் சட்ட முதுகலை பட்டம் பெற்றார்.
பட்டம் பெற்றபிறகு பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். அனிதா ஆனந்த் 2019ஆம் ஆண்டு அரசியலில் நுழைந்தார். அதுமுதல், லிபரல் கட்சியின் முக்கிய நபர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். கனடா அரசில் தற்போது போக்குவரத்து மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராக பணியாற்றி வரும் 57 வயதான அனிதா ஆனந்த், இதற்கு முன்பு பாதுகாப்பு அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். 2021ஆம் ஆண்டு அவர் தேசிய பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டபோது, அங்கு அவர் கனடா ஆயுதப் படைகளில் பாலியல் முறைகேடுகளைத் தீர்ப்பதற்கான சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார். மேலும், ரஷ்யாவுடனான மோதலின் மத்தியில் உக்ரைனுக்கு ஆதரவளித்தார்.