அமெரிக்காவில் கடந்த 2009ஆம் ஆண்டு 44வது அதிபராகப் பதவியேற்றவர் பராக் ஒபாமா. தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியில் இருந்த அவர், 2017ஆம் ஆண்டில் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறினார். இவருடைய மனைவி, மிச்செல் ஒபாமா. சமீபகாலமாக இவருக்கும் ஒபாமாவுக்கும் இடையே விவாகரத்து பற்றிய வதந்தி செய்திகள் வேகமாகப் பரவின.
ஜனவரி 9ஆம் தேதி நடைபெற்ற முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டரின் அரசு இறுதிச் சடங்கில் ஒபாமாவுடன் மிச்செல் கலந்துகொள்ளாததும், நாளை (ஜன.20) நடைபெற இருக்கும் ட்ரம்பின் பதவியேற்பு விழாவில் மிச்செல் கலந்துகொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்ததும் அவர்களுக்குள் விவாகரத்து பற்றிய வதந்தி செய்திகளுக்குக் காரணமாய் அமைந்தன.
இந்த நிலையில் மிச்செல்லின் பிறந்தநாளுக்கு தனது எக்ஸ் பதிவில் உருக்கமாக வாழ்த்து தெரிவித்து வதந்திகளுக்கு ஒபாமா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
கடந்த ஜனவரி 17 மிச்செல் பிறந்தநாளை முன்னிட்டு ஒபாமா வெளியிட்டுள்ள பதிவில், "என் வாழ்க்கையின் அன்பான @MichelleObama. உனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீ வீட்டின் ஒவ்வோர் அறையையும் அரவணைப்பு, அறிவு, சந்தோஷம் மற்றும் கருணையால் நிரப்புகிறாய். உன்னுடன் வாழ்க்கையின் சாகசங்களைச் சேர்ந்து செய்ய முடிந்ததால் நான் மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். உன்னை நேசிக்கிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.
இருவரும் சேர்ந்து உணவருந்தும் புகைப்படத்தையும் ஒபாமா பகிர்ந்திருந்தார். அவருடைய அந்தப் பதிவுக்கு மிச்செல், "லவ் யூ, தேன்!" என்று பதிலளித்தார். மேலும் இரண்டு எமோஜிகளையும் பதிவிட்டிருந்தார். அதில் இதயம் போன்ற எமோஜியும், மற்றொன்றில் ஒரு முத்தத்தை ஊதுகின்ற எமோஜியும் இடம்பெற்றிருந்தது.
இதையடுத்து, அவர்களின் விவாகரத்து பற்றிய செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். 1989இல் முதன்முறையாக பராக் ஒபாமாவை மிச்செல் சந்தித்தார். அதன்பிறகு இருவரும் காதலித்து 1992இல் திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்கு மலியா மற்றும் சாஷா என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.