உலகம்

'பைடன் அமைச்சரவையில் நான் இடம்பெற்றால்..?' - விபரீதத்தை விவரித்த ஒபாமா!

webteam

அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடனின் அமைச்சரவையில் தாம் இடம்பெற்றால், தன் மனைவி மிஷேல் நிச்சயம் தன்னை விட்டுப் பிரிந்து சென்றுவிடுவார் என்று முன்னாள் அதிபர் பராக் ஒபாமா விவரித்துள்ளார்.

அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் வெளியாகி 11 நாட்கள் ஆகிவிட்டன. ஆனால், டொனால்டு ட்ரம்ப் தனது தேர்தல் தோல்வியை ஏற்க மறுத்து வருகிறார். ட்ரம்பை ஆதரிக்கும் ஃபாக்ஸ் தொலைக்காட்சியும், குடியரசுக் கட்சியில் உயிருடன் இருக்கும் ஒரேயொரு முன்னாள் அதிபரான ஜார்ஜ் புஷ்ஷும் பைடனின் வெற்றியை ஆதரித்து அவருக்கு வாழ்த்தும் சொல்லிவிட்டனர்.

அமெரிக்காவின் தேர்தல் அதிகாரிகளும் முறைகேடுகள் நடக்கவில்லை என்று சொல்லிப்பார்த்துவிட்டனர். ஆனால், ட்ரம்ப் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால், அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர் அமெரிக்கர்கள். ஆனால், இதைப்பற்றியெல்லாம் ஜோ பைடன் கவலைப்படவில்லை.

பைடன் தன் அமைச்சரவையில் யார், யார் இடம்பெற வேண்டும் என்பதை தீர்மானித்து வருகிறார். இந்த அமைச்சரவையில் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா இடம்பெறப் போவதாக செய்திகள் கசிந்துள்ளன. அதற்கான சாத்தியக்கூறுகளை பைடனின் டீம் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்தத் தகவல்கள் தொடர்பாக பராக் ஒபாமாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இது தொடர்பாக பேசிய அவர், "பைடன் தனது அமைச்சரவையில் எனக்கு இடம் கொடுத்தால் அதனை ஏற்கமாட்டேன். காரணம், பைடனுக்கு என்னுடைய ஆலோசனைகள் தேவைப்படாது. அப்படி ஒருவேளை அதையும்மீறி, நான் பைடன் அமைச்சரவையில் இணைந்தால், என் மனைவி மிஷேல் நிச்சயம் என்னை விட்டுப் பிரிந்து சென்றுவிடுவார். அதனால், வெள்ளை மாளிகையின் பணியாளராக செயல்படும் எந்தத் திட்டமும் இல்லை. அதேநேரத்தில், பைடனுக்கு என்னால் முடிந்த உதவியை செய்வேன்" எனக் கூறியிருக்கிறார்.

இதற்கிடையே, பைடன் அமைச்சரவையின் விவரங்கள் ஒவ்வொன்றாக வெளியாகி கொண்டிருக்கின்றன. இதில், ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு அதிக முக்கியவத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பாதுகாப்புத் துறை, வெளியுறவுத் துறை ஆகிய முக்கிய துறைகளுக்கு பெண்களே அமைச்சர்களாக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. சுகாதாரத் துறையில் இந்தியாவை பூர்விகமாக கொண்ட விவேக் மூர்த்தி இடம்பெற அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன