முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் நிறவேறுபாடு குறித்த ட்வீட் 29 மில்லியன் லைக் பெற்று ட்விட்டர் வரலாற்றிலேயே பெரும் சாதனை படைத்துள்ளது.
அமெரிக்காவில் 19-ம் நூற்றாண்டில் நடந்த உள்நாட்டுப்போரில் ராணுவ தளபதியாக இருந்தவர் ஜெனரல் ராபர்ட் லீ. இவர் ஒரு வெள்ளையர். இவருடைய நினைவாக விர்ஜீனியா மாகாணம், சர்லோட்டஸ்வில்லே நகரில் வைக்கப்பட்டிருந்த சிலையை அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவில் வாழும் வெள்ளை இனத்தவர் சர்லோட்டஸ்வில்லே நகரில் ஒரு கண்டன பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதற்கு எதிராக ஒரு தரப்பினர் செயல்பட்டனர். அவர்கள் பேரணிக்கு எதிர் போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் மீது ஒருவர் காரை வேகமாக ஓட்டி வந்து மோதினார். இதில் 32 வயதான ஒரு பெண் உயிரிழந்தார். 19 பேர் படுகாயம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து அந்த காரின் டிரைவர் கைது செய்யப்பட்டார். அவர் எதற்காக கூட்டத்தினர் மீது காரை வேகமாக ஓட்டி வந்து மோதினார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்தக் கலவரத்தில் பலியான பெண்ணுக்கு இரங்கல் தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அனைவரும் அமெரிக்கர்களாக ஒன்றிணைய வேண்டும் என்றும் யாரையும் இன அடிப்படையில் வெறுக்க வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை, அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவு செய்தார். அந்த பதிவில், நிறம், மதத்தை காரணம் காட்டி மற்றவரை வெறுப்பதற்காக யாரும் பிறக்கவில்லை என குறிப்பிட்டார். மேலும் பல இனத்தை சேர்ந்த குழந்தைகள் ஒன்றுகூடி விளையாடுவதை ஜன்னல் வழியாக ஒபாமா பார்த்து சிரிப்பது போன்ற புகைப்படத்தையும் பதிவிட்டார்.
ஒபாமா வெளியிட்டுள்ள இந்த ட்விட் சில மணி நேரங்களில் சுமார் 12 லட்சம் பேர் ரீட்விட் செய்து இருந்தனர். திங்கள்கிழமை காலை 10 மணி நிலவரப்படி 29 லட்சம் பேர் அவரது கருத்துக்கு லைக் செய்து வரவேற்பு தெரிவித்தனர். ஒபாமாவின் இந்த ட்விட், ட்விட்டர் வரலாற்றிலேயே அதிகம் லைக் செய்யப்பட்ட 5-வது ட்விட்டாக புதிய சாதனை படைத்துள்ளது.