உயிருக்கு பயந்து வங்கதேசத்தில் தஞ்சம் புகுந்து வரும் ரோஹிங்ய இன முஸ்லிம்களை மீண்டும் மியான்மருக்கு திரும்பிச் செல்லும்படி உள்ளூர் மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
மியான்மர் ராணுவத்தின் அடக்குமுறைக்கும், அச்சுறுத்தலுக்கும் பயந்து ராகினே மாகாணத்தில் இருந்து இதுவரை 4 லட்சத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்ய முஸ்லிம்கள் வங்கதேசத்துக்கு வந்து சேர்ந்துள்ளனர். அவர்களுக்கு தேவையான குடிநீர், உணவு, உறைவிடம் வழங்குவதற்கு வங்கதேச அரசும், ஐ.நா.வும் சர்வதேச நாடுகளின் உதவிகளை கேட்டுள்ளன.
இந்தச் சூழ்நிலையில் ரோஹிங்ய முஸ்லிம்களின் வரவால் வங்கதேசத்தில் குற்றச்செயல்கள் அதிகரிக்கும் என அந்நாட்டு மக்கள் குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர். கடந்த காலங்களிலும் இப்படி தஞ்சம் தேடி வந்த ரோஹிங்ய முஸ்லிம்கள் கொலை, கொள்ளை உள்ளிட்ட எண்ணற்ற குற்றங்களில் ஈடுபட்டதால்தான் அவர்களை மியான்மருக்கே திரும்பிச் செல்லும்படி வற்புறத்துகிறோம் என்கின்றனர் வங்கதேசத்தின் காஸ் பஜார் பகுதி மக்கள்.
மேலும் ரோஹிங்ய மக்களுக்கு யாரும் தங்களது வீட்டில் அடைக்கலம் கொடுக்கக் கூடாது என்றும் காக்ஸ் பஜார் முழுவதும் ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை செய்யப்பட்டு வருகிறது. தவறி அடைக்கலம் கொடுத்திருந்தால் அவர்களை அகதிகள் முகாமுக்கு திருப்பி அனுப்பி வைக்கும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
நெஞ்சில் அச்சத்துடனும், கண்களில் கண்ணீருடனும் வறுமையில் வாழ்ந்தாலும் போதும் என்ற எண்ணத்துடன் வங்கதேசத்தில் புகலிடம் தேடி வந்த ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு இத்தகைய அணுகுமுறை மிகப் பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளன. சித்ரவதையால் துன்பப்பட்டு வங்கதேசம் ஓடி வந்த எங்களை இப்படி துரத்தலாமா என்று அவர்கள் பரிதாபத்துடன் கேட்கின்றனர்.
மியான்மரில் அமைதி திரும்பும் வரை மனிதநேய அடிப்படையில் வேண்டுமானால் அவர்கள் இங்கு வசிப்பதற்கு அனுமதி அளிக்கலாம் எனவும் நிரந்தரமாகத் தங்க அனுமதிக்கக் கூடாது எனவும் வங்கதேசத்தவர்கள் தெரிவிக்கின்றனர்.