வங்கதேசத்தில் பி.என்.பி கட்சி வெற்றி பெற்றதையடுத்து, தாரிக் ரஹ்மான் பிரதமராக நாளை பதவியேற்க உள்ளார். இந்திய பிரதமர் மோடி பங்கேற்க முடியாத நிலையில், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கலைக்கப்பட்டப் பிறகு, அந்நாட்டில் கடந்த 12-ஆம் தேதி நடைபெற்ற பொதுத்தேர்தலில், மொத்தமுள்ள 300 இடங்களில் 209 இடங்களில் வங்கதேச தேசியவாதக் கட்சி (BNP) வெற்றி பெற்றிருக்கிறது. இதையடுத்து, அங்கு முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகனும் பி.என்.பி-யின் தலைவருமான தாரிக் ரஹ்மான் நாளை (பிப்ரவரி 17) பிரதமராக பதவியேற்க உள்ளார்.
இவ்விழா, வங்கதேச நாடாளுமன்றத்தின் தெற்கு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்தநிலையில், இந்தியா, பாகிஸ்தான் உட்பட 13 நாடுகளின் தலைவர்களுக்கு, தாரிக் ரஹ்மானின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வங்கதேசம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து, பி.என்.பி கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான எஹ்சானுல் ஹக் மிலன் தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த சூழலில், பிரதமர் மோடி தாரிக் ரஹ்மான் பதவியேற்பு விழாவில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நாளை பிரதமர் மோடி மும்பையில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானைச் சந்தித்துப் பேச இருக்கிறார். தொடர்ந்து, டெல்லியில் நடைபெறவுள்ள செயற்கை நுண்ணறிவு தொடர்பான உச்சி மாநாட்டில் கலந்துகொள்கிறார். இதன்காரணமாக, பிரதமர் மோடி வங்கதேசம் செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில், வங்கதேசத்தின் புதிய பிரதமராக பதவியேற்கும் தாரிக் ரஹ்மானின் பதிவியேற்பு விழாவில் இந்தியா சார்பில், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா மற்றும் மத்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆகியோர் செல்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
முன்னதாக, ஷேக் ஹசீனாவின் வெளியேற்றத்திற்குப் பிறகு 18 மாதங்களாக நீடித்த இடைக்கால ஆட்சியைத் தொடர்ந்து, பிஎன்பியின் இந்த வெற்றி அந்த நாட்டில் ஒரு முக்கிய அரசியல் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே, இந்திய பிரதமர் நரேந்திர மோடி தாரிக் ரஹ்மானுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார். இதற்கிடையே, ஷேக் ஹசீனாவைத் திருப்பி அனுப்பும்படி இந்தியாவிடம் முறைப்படி கோரிக்கை விடுக்க புதிதாக அமைய உள்ள வங்கதேச தேசியவாதக் கட்சி அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.