அண்டை நாடான வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக கடந்த 2024-ஆம் ஆண்டு மாணவர் அமைப்பினர், பொதுமக்கள் இணைந்து நடத்திய புரட்சி மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. இதன் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து அங்கு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, இடைக்கால அரசு அமைந்தது. பின்னர் நடைபெற்ற பொதுத் தேர்தலில், பின்.என்.பி. கூட்டணி அமோக வெற்றிபெற்று அரியணையைப் பிடித்தது. அக்கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான் புதிய பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார். அதேநேரத்தில், வன்முறை தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றவாளி என தீர்ப்பளித்த சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம், அவருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, அவரை நாடு கடத்துமாறு வங்கதேச அரசு கோரிக்கை விடுத்து வருகிறது. ஆனால் இந்தியா இந்த விஷயத்தில் மவுனம் காத்து வருகிறது. இதற்கிடைய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, சமீபத்தில் பொதுவெளியில் தோன்றிய ஷேக் ஹசீனா, தமக்கு என்ன நேர்ந்தாலும், வரும் டிசம்பர் மாதம் வங்கதேசம் செல்வேன் எனத் தெரிவித்திருந்தார். இதை வங்கதேசம் வரவேற்றுள்ளபோதிலும், அவரைக் கைது செய்வதற்கான ஆயத்த நடவடிக்கைகளில் இப்போதே தயாராகி வருகிறது.
இந்த நிலையில், வங்கதேசப் பிரதமர் தாரிக் ரஹ்மானின் இந்தியப் பயணம் தள்ளிப்போய்க் கொண்டிருக்கிறது. இதன் பின்னணியில், ஷேக் ஹசீனா விவகாரம் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த வாரத்தில் திட்டமிடப்பட்டிருந்த தாரிக் ரஹ்மானின் இந்தியப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. விரைவில் அவர் இந்தியா வருவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தனது இந்திய வருகைக்கு தாரிக் ரஹ்மான் அரசு நிபந்தனை விதித்துள்ளது. அவரின் இந்திய பயணத் திட்டத்திற்கு அங்குள்ள அரசியல் காட்சிகளே எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இந்த நிபந்தனைகளை தாரிக் அரசு விதித்துள்ளது.
இதுதொடர்பாக, வங்கதேச வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஷாஹிதுல் கரீம், "ஷேக் ஹசீனா மற்றும் நாடு தப்பிய இதர குற்றவாளிகளை நாடுகடத்துவதில் இந்திய அரசு விரைந்து செயல்பட வேண்டும் என்றும் அதன் மூலம் பிரதமர் தாரிக் ரஹ்மான் பயணத்திற்கு ஒரு சாதகமான சூழலை உருவாக்க வேண்டும்" என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். முன்னதாக, தாரிக் ரஹ்மானின் இந்தியப் பயணத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். சட்டவிரோத குடியேற்றம், பொருளாதார ஒத்துழைப்பு ஆகியவற்றில் இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தொய்வை கண்டுள்ள நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.