வங்கதேசம், இந்தியா, முஜிபுர் ரஹ்மான் எக்ஸ் தளம்
உலகம்

முஜிபுர் ரஹ்மான் வீடு இடிப்பு | ”இது உள்நாட்டு விவகாரம்” இந்தியா கண்டனத்திற்கு வங்கதேசம் எதிர்வினை!

வங்கதேசத்தில் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் வீடு இடிக்கப்பட்டதற்கு, இந்தியா கண்டனம் தெரிவித்த நிலையில், அதற்கு அந்நாடு எதிர்வினையாற்றியுள்ளது.

Prakash J

அண்டை நாடான வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக கடந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மாணவர் அமைப்பினர், பொதுமக்கள் இணைந்து நடத்திய புரட்சி மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. இதன் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து வங்கதேசத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, ராணுவத்தின் கண்காணிப்பில் அங்கு இடைக்கால அரசு அமைந்துள்ளது. இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி அவாமி லீக் கட்சியின் மாணவர் அமைப்பு ஒருங்கிணைத்த ஆன்லைன் நிகழ்ச்சியில் முகநூல் மூலம் ஷேக் ஹசீனா பேசவிருந்தார்.

முஜிபுர் ரஹ்மான்

அதேநேரத்தில், போராட்டக்காரர்கள் அவருடைய தந்தையின் வீட்டைச் சேதப்படுத்தினர். வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானின் வீட்டை போராட்டக்காரர்கள் தீயிட்டு கொளுத்தி, புல்டோசர் கொண்டு இடித்தனர். அவரது வீடு மட்டுமல்லாமல், ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் தலைவர்கள் பலரது வீடுகளும் இடிக்கப்பட்டன.

இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், "வங்காளதேச மக்களின் வீரமிக்க எதிர்ப்பின் அடையாளமாக விளங்கும் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் வரலாற்றுச் சிறப்புமிக்க இல்லம் இடிக்கப்பட்டது வருந்தத்தக்கது. வங்காள அடையாளத்தையும் பெருமையையும் வளர்த்த சுதந்திரப் போராட்டத்தை மதிக்கும் அனைவரும் வங்காளதேசத்தின் தேசிய உணர்வுக்கு இந்த இல்லத்தின் முக்கியத்துவத்தை அறிந்திருக்கிறார்கள். இந்த நாசவேலைச் செயலை கடுமையாகக் கண்டிக்க வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.

முஜிபுர் ரஹ்மான்

இதற்கு வங்கதேசம் எதிர்வினையாற்றியுள்ளது. அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் முகமது ரஃபிகுல் ஆலம், "இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை இடைக்கால அரசாங்கத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. வங்கதேசத்தின் உள்விவகாரங்கள் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் இத்தகைய கருத்துக்கள் பொருத்தமற்றவை. வங்காளதேசம் எந்த ஒரு நாட்டின் உள்விவகாரங்கள் குறித்தும் அதிகாரப்பூர்வமாக கருத்து தெரிவிப்பதில்லை. மற்ற நாடுகளிடமிருந்தும் அதே நடத்தையை எதிர்பார்க்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.