வங்கதேச கரன்சி எக்ஸ் தளம்
உலகம்

வங்கதேச புதிய கரன்சியில் இடம்பிடித்த இந்துக் கோயில்.. சிறப்புகள் என்ன?

வங்கதேச இடைக்கால அரசு வெளியிட்டுள்ள ரூபாய் நோட்டுகளில், தினாஜ்பூரில் உள்ள 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த காந்தாஜி இந்து கோயிலும் இடம்பெற்றுள்ளது.

Prakash J

வங்கதேச புதிய கரன்சியில் இடம்பெற்ற இந்துக் கோயில்

அண்டை நாடான வங்கதேசத்தில், மாணவர்களின் போராட்டத்திற்குப் பிறகு தன்னுடைய பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதையடுத்து, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்துள்ளது.

இந்த நிலையில், ஷேக் ஹசீனாவின் தந்தையான முஜிபுர் ரஹ்மானின் படங்கள் இல்லாத புதிய கரன்சி நோட்டுகளை, இடைக்கால அரசு வெளியிட்டுள்ளது. வங்கதேச நாடு உருவாக முக்கியக் காரணமாக இருந்தவர், முஜிபுர் ரஹ்மான். இவர், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் தந்தையும் ஆவார். நாட்டின் தேசத்தந்தை என அழைக்கப்படும் இவரது சிலை, மாணவர்கள் போராட்டத்தின்போது சேதப்படுத்தப்பட்டது. தொடர்ந்து இவரது வரலாறு பாடப் புத்தகங்களில் இருந்து நீக்கப்பட்டது. அடுத்து, இவரது இல்லம் இடிக்கப்பட்டது.

bangladesh bank notes

தற்போது அவரது புகழை குறைக்கும் வகையில் வங்கதேச கரன்சியில் இருந்து நீக்க முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு திட்டமிட்டது. இதையடுத்து, முஜிபுர் ரஹ்மானின் படங்கள் இல்லாத புதிய கரன்சி நோட்டுகளை, இடைக்கால அரசு வெளியிட்டுள்ளது. இவை விரைவில் புழக்கத்துக்கு வரவுள்ளன.

இவற்றில், கலாசார மற்றும் வரலாற்று அடையாளங்களைப் பிரதிபலிக்கும் படங்கள் இடம்பெற்றுள்ளன. அந்த வகையில், தினாஜ்பூரில் உள்ள 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த காந்தாஜி இந்துக் கோயிலும் இடம்பெற்றுள்ளது. இது, அந்த நாட்டு 20-தக்கா நாணயத்தாளில் இடம்பெற்றுள்ளது. மேலும், அனைத்து புதிய ரூபாய் நோட்டுகளையும் போலவே, 20-தக்கா ரூபாய் நோட்டுகளிலும் வங்காளதேசத்தின் தேசிய மலரான இலை மற்றும் மொட்டுடன் கூடிய அல்லியின் படம் பின்னணியில் வெளிர் நிறத்தில் இடம்பெற்றுள்ளது.

தினாஜ்பூர் காந்தாஜி இந்துக் கோயிலின் சிறப்புகள்

20-தக்கா நோட்டில் உள்ள காந்தஜீவ் கோயில், ஓர் அற்புதமான டெரகோட்டா நினைவுச்சின்னமாகும். மேலும் வங்காளதேசத்தில் அதிகம் பார்வையிடப்படும் கோயில்களில் ஒன்றாகும். இது, கந்தாஜியூ கோயில், கந்தாஜி கோயில் அல்லது கந்தாநகர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. வங்காளதேச ஐக்கிய செய்தி நிறுவனத்தின் (UNB) அறிக்கையின்படி, இந்தப் பெயர் காந்தா அல்லது கிருஷ்ணாவின் ஒரு வடிவமான காந்தாஜியிலிருந்து பெறப்பட்டது.

18 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட காந்தாஜியூ கோயில், கிருஷ்ணருக்கும் அவரது ராணி ருக்மிணிக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்று UNB தெரிவித்துள்ளது. இந்தக் கோயிலின் கட்டுமானப் பணிகள் 1704ஆம் ஆண்டு தினாஜ்பூரின் மகாராஜா பிரன்னாத்தால் தொடங்கப்பட்டு, 1752ஆம் ஆண்டு அவரது மகன் மகாராஜா ராம்நாத்தால் முடிக்கப்பட்டது. வைணவ செல்வாக்குக்குப் பெயர் பெற்ற பிரிக்கப்படாத வங்காளப் பகுதியில், கந்தஜேவ் கோயில் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.

bangladesh new bank notes hindu temple

2017ஆம் ஆண்டு ’டாக்கா ட்ரிப்யூனி’ல் வெளியான ஒரு செய்தியின்படி, 2015 டிசம்பரில் பக்தர்கள் ராஷ் மேளாவைக் கொண்டாடிக் கொண்டிருந்தபோது, ​​புதிய ஜமாத்துல் முஜாஹிதீன் பங்களாதேஷ் (JMB) பயங்கரவாதிகளால் காந்தஜீவ் கோயில் தாக்கப்பட்டது, அவர்கள் மூன்று குண்டுகளை அதன்மீது வீசினர். புதிய ஜே.எம்.பி., சிரியாவை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான இஸ்லாமிய அரசு அல்லது ஐ.எஸ்.ஐ.எஸ்.-இன் துணை அமைப்பாகும். மேலும், இது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட பிற நாடுகளில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாகும். தாக்குதலுக்குப் பிறகு உடனடியாக ஜே.எம்.பி.யின் மூன்று பயங்கரவாதிகளும், 2017இல் மேலும் இரண்டு பயங்கரவாதிகளும் பிடிபட்ட போதிலும், கோயில் தாக்குதலை பயங்கரவாத அமைப்பு ஒப்புக்கொள்ளவில்லை. மறுபுறம், காந்தஜீவ் கோயில் நிலத்தில் ஒரு மசூதி கட்டப்படுவதாகவும் தகவல்கள் வெளிவந்தன. இது, உள்ளூர் இந்து சமூகத்தினரிடையே பதற்றத்தையும் விரக்தியையும் தூண்டியுள்ளது என்று மார்ச் 2024 டாக்கா ட்ரிப்யூன் அறிக்கை தெரிவித்துள்ளது.