உலகம்

லுங்கியில் வந்ததால் டிக்கெட் தர மறுப்பு - வீடியோ வெளியிட்ட ரசிகர்.. பதறிபோன திரையரங்கம்!

JustinDurai

லுங்கி அணிந்து வந்திருந்ததால் திரையரங்குக்குள் நுழைய ரசிகருக்கு அனுமதி மறுத்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாறியிருக்கிறது.

ஸ்டார் சினிப்ளெக்ஸ், வங்காளதேசம் நாட்டின் ஒரு முன்னணி மல்டிபிளக்ஸ் நிறுவனம் ஆகும். இந்த திரையரங்குக்கு கடந்த சில தினங்களுக்கு முன் சமன் அலி சர்கார் என்பவர் லுங்கி அணிந்து சென்றுள்ளார். அப்போது இப்படி லுங்கி அணிந்து வந்தால் டிக்கெட் வழங்கப்பட மாட்டாது என்றுக் கூறி திரையரங்கு ஊழியர்கள் அவரை திருப்பி அனுப்பியுள்ளனர். இதனால் சமன் அலி சர்கார் படம் பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார். அவருக்கு டிக்கெட் வழங்க மறுக்கப்பட்டதை அருகில் நின்ற ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிடவே, இந்த விவகாரம் பூதாகரமாக மாறியது.    

இதுபோல படம் பார்க்க வருபவர்கள் என்ன ஆடை அணிய வேண்டும், என்ன ஆடை அணியக் கூடாது என வரையறுக்கும் விதமாக கொள்கைகள் ஏதேனும் உள்ளனவா? என நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து, லுங்கி அணிந்து வந்த ரசிகருக்கு டிக்கெட் வழங்க மறுக்கப்பட்ட சம்பவத்திற்கு ஸ்டார் சினிப்ளெக்ஸ் வருத்தம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஸ்டார் சினிப்ளெக்ஸ் வெளியிட்ட அறிக்கையில், ''உடையின் அடிப்படையில் வாடிக்கையாளர்களிடம் நாங்கள் பாகுபாடு காண்பிப்பதில்லை என்பதை முதலில் தெளிவுபடுத்த விரும்புகிறோம். லுங்கி அணிந்திருப்பதால், ஒருவருக்கு டிக்கெட் வழங்குவதற்கான உரிமையை மறுக்கும் கொள்கைகள் எங்கள் நிறுவனத்தில் இல்லை.

எங்கள் திரையரங்குகளில் தங்களுக்குப் பிடித்த திரைப்படங்களை கண்டு ரசிக்க அனைவரும் வரவேற்கப்படுகிறார்கள். சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமாக தவறான புரிதலின் விளைவாக இருக்கலாம். இதுபோன்ற ஒரு நிகழ்வு நடைபெறுவதைக் கண்டு நாங்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளோம், மேலும் அதை எங்கள் கவனத்திற்குக் கொண்டுவந்த சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்" என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: ’அந்த ஒரு விளம்பரம்’’ - வெளியான உடனே பெண்கள் விளம்பரங்களில் தோன்ற தடைவிதித்த ஈரான் அரசு!