வங்கதேசத்தில் கடந்த ஆண்டு, இடஒதுக்கீட்டுக்கு எதிராக மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. இதன் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைந்துள்ளது.
அதேநேரத்தில், வன்முறைக்குக் காரணமாக முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது 100க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளன. தவிர, அவரைக் கைது செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தச் சூழலில் ஷேக் ஹசீனாவை நாடு கடத்தும்படி வங்கதேச அரசு இந்தியாவிடம் கோரிக்கை வைத்து வருகிறது. ஆனால், அதற்கு இந்தியா எந்தப் பதிலையும் அளிக்கவில்லை. அதேநேரத்தில், அவருடைய விசாவை நீட்டித்துள்ளது.
இந்த நிலையில், ஜெனீவாவில் உள்ள உலக சுகாதார நிறுவனத்தில் தென் கிழக்கு ஆசிய பிராந்திய இயக்குநராக இருக்கும் ஹசீனாவின் மகள் சாய்மா வாஜித்தை அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கும்படி, அந்த அமைப்புக்கு வங்கதேச அரசு வலியுறுத்தி உள்ளது. கடந்தாண்டு ஜனவரி மாதம், இந்த பொறுப்பில் நியமிக்கப்பட்ட அவர் மீது, தற்போது ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகள் விசாரணைக்கு வந்துள்ளது.
இதையடுத்தே, அவரை பதவியில் இருந்து நீக்கும்படி வங்கதேச வெளியுறவு அமைச்சகம், உலக சுகாதார நிறுவனத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளது. என்றாலும், அவரை இந்தப் பொறுப்பிலிருந்து நீக்க முடியாது என தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.
”ஐ.நா. அமைப்பு விதிகளின்படி, ஒரு பதவிக்கு நியமிக்கப்பட்டவர், தன் சொந்த தகுதியால்தான் அந்த பதவிக்கு நியமிக்கப்படுகிறார். குறிப்பிட்ட அந்த நாட்டில் அரசு கவிழ்ந்தாலும், அவர் தன் பதவிக்காலம் முடியும்வரை அந்த பதவியில் நீடிப்பார்” என வங்கதேச வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
டெல்லியை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சாய்மா, அடிப்படையில் ஒரு டாக்டர் என்பது குறிப்பிடத்தக்கது.