வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமரான கலீதா ஜியா, உடல்நலக் குறைவால் 80ஆவது வயதில் இன்று காலமானார். அவரது மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
வங்காளதேசத்தின் முன்னாள் அதிபரும், அந்நாட்டின் தேசியவாதக் கட்சியின் நிறுவனருமான ஜியாவுர் ரஹ்மானின் மனைவியான கலீதா ஜியா, இரண்டு முறை (1991-1996, மற்றும் 2001-2006) பிரதமராக இருந்தவர். இன்னும் சொல்லப்போனால், வங்காளதேச அரசியலில் ஆதிக்கம் செலுத்திய இரண்டு பேகம்களில் கலீதா ஜியாவும் ஒருவர். மற்றொருவர், தற்போது இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கும் ஷேக் ஹசீனா. இருவரின் ஆதிக்கப் போட்டி பல தசாப்தங்களாக நாட்டின் ஆட்சி மற்றும் கட்சி அரசியலை வடிவமைத்தது. ஹசீனாவின் ஆட்சியின்போது. கலீதா ஜியா ஊழல் குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு 2018இல் 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். 2019 முதல் வீட்டுக் காவலில் இருந்த ஜியா, ஆகஸ்ட் 2024இல் ஷேக் ஹசீனா அரசாங்கத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டார்.
ஹசீனா பதவி நீக்கம் செய்யப்பட்டு, ஆகஸ்ட் 2024இல் இடைக்கால நிர்வாகத்தின் தலைவராக முகமது யூனுஸ் பதவியேற்ற பிறகு, லண்டனில் இருந்து திரும்பினார். 2025 ஜனவரி முதல் லண்டனில் நான்கு மாதங்கள் தனது மகனும் பிஎன்பி தலைவருமான தாரிக் ரஹ்மானுடன் மருத்துவச் சிகிச்சையில் இருந்த கலீதா ஜியா, பின்னர் மே மாதம் வங்கதேசம் திரும்பினார். இதற்கிடையே, மருத்துவர்களின் கூற்றுப்படி, அவர் வயது முதிர்ச்சியால் கல்லீரல் சிரோசிஸ், மூட்டுவலி, நீரிழிவு நோய் மற்றும் மார்பு மற்றும் இதயம் தொடர்பான பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்காக அவர் நவம்பர் 23 முதல் டாக்காவின் எவர்கேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார், டிசம்பர் 11 அன்று, அவருக்கு வென்டிலேட்டர் ஆதரவு அளிக்கப்பட்டது. இரண்டு நாட்களுக்கு முன்பு, அவர் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக அவரது தனிப்பட்ட மருத்துவர் உறுதிப்படுத்தினார். இந்த நிலையில், அவர் இறந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக, அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக, ஜியா சார்பாக போகுரா-7 தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. மறுபுறம், 17 ஆண்டுகள் நாடு கடத்தப்பட்ட பிறகு கடந்த வாரம் டாக்கா திரும்பிய அவரது மகன் தாரிக் ரஹ்மான், தேர்தலில் முன்னணியில் இருப்பதாக அறியப்படுகிறது. இந்தத் தேர்தலில் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி தடை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் பிரதமரான பேகம் கலீதா ஜியா, 1945ஆம் ஆண்டு இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் பிறந்தவர் ஆவார். ஒரு தேநீர் வியாபாரியின் மகளான இவர், இந்தியப் பிரிவினைக்குப் பிறகு தனது குடும்பத்துடன் வங்கதேசத்திற்கு குடிபெயர்ந்தார். 15 வயதில், அவர் அப்போது இளம் ராணுவ அதிகாரியாக இருந்த ஜியாவுர் ரஹ்மானை மணந்தார். 1977ஆம் ஆண்டு இராணுவத் தளபதியாக இருந்த ரஹ்மான் தன்னை அதிபராக அறிவித்துக் கொண்டார். தொடர்ந்து அவர் அரசியல் கட்சியை ஆரம்பித்து, பின்னர் மக்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1981ஆம் ஆண்டு, சிட்டகாங்கில் இராணுவ அதிகாரிகள் குழுவால் அவர் படுகொலை செய்யப்பட்டார். அதன்பிறகு ரஹ்மானின் மனைவியாக இருந்த கலீதா ஜியா பி.என்.பியில் உறுப்பினராகி அதன் துணைத் தலைவராக உயர்ந்தார். தொடர்ந்து, கலீதா ஜியா ஜனநாயகத்திற்கான பிரசாரத்தை ஒழுங்கமைக்கத் தொடங்கியபோது, இராணுவம் நிர்வகிக்கப்பட்ட தேர்தல்களை நடத்தியது. ஆனால் கலீதா ஜியாவின் கட்சி அதில் போட்டியிடவில்லை. இதற்கிடையே, அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். எனினும் அவரது ஜனநாயகப் போராட்டம் தொடர்ந்தது. அந்தப் போராட்டம், 1991ஆம் ஆண்டு, காலித் ஜியாவையும் அவர் வளர்த்த பி.என்.பியும் இராணுவத்திற்குப் பிந்தைய தேர்தல்களில் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது. அவரும் பிரதமரானார். இதன்மூலம் வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமராகவும், ஒரு முஸ்லிம் நாட்டை வழிநடத்திய இரண்டாவது பெண்மணியாகவும் அவர் புகழ்பெற்றார்.