முகமது யூனுஸ் x page
உலகம்

வங்கதேசம் | நெருங்கும் தேர்தல்.. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முஹம்மது யூனுஸ் அதிரடி உத்தரவு!

வங்கதேச நாட்டின் ஒட்டுமொத்த சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து ஆய்வு செய்வதற்காக, தலைமை ஆலோசகர் பேராசிரியர் முஹம்மது யூனுஸ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

PT WEB

வங்கதேசத்தில் வரவிருக்கும் தேர்தலுக்கு முன்னதாக சட்டம் ஒழுங்கை பாதுகாக்க, முஹம்மது யூனுஸ் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் முக்கிய கொலை வழக்குகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், முக்கிய அலுவலகங்கள் மீது தாக்குதல்கள் தொடர்பாக 31 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வங்கதேச நாட்டின் ஒட்டுமொத்த சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து ஆய்வு செய்வதற்காக, தலைமை ஆலோசகர் பேராசிரியர் முஹம்மது யூனுஸ் தலைமையில் நேற்று தலைநகர் டாக்காவில் உள்ள விருந்தினர் மாளிகையான 'ஜமுனா'வில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வரவிருக்கும் தேசியத் தேர்தலுக்கு முன்னதாக நாட்டின் சட்டம் ஒழுங்கு எந்தச் சூழலிலும் சீர்குலையாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு யூனுஸ் உத்தரவிட்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. பிஎன்பி (BNP) கட்சியின் செயல் தலைவர் தாரிக் ரஹ்மான் நாடு திரும்புவது மற்றும் அது தொடர்பான பாதுகாப்பு விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டன.

முகம்மது யூனுஸ்

இன்குலாப் மஞ்ச் செய்தித் தொடர்பாளர் மற்றும் ஜூலை புரட்சி வீரர் ஷெரிப் உஸ்மான் ஹாடி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையவர்களை விரைந்து கைது செய்ய உத்தரவிடப்பட்டது. இக்கொலை வழக்கை 'விரைவு நீதிமன்றத்தில்' விசாரிக்க அரசு முடிவு செய்துள்ளது. நாட்டின் இரண்டு முக்கிய நாளிதழ்கள் மற்றும் இரண்டு கலாசார அமைப்புகளின் அலுவலகங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் 31 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் முகமது காசிம் ஃபாரூகி, முகமது சைதூர் ரஹ்மான் உள்ளிட்ட 6 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். சிட்டகாங்கில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் இல்லத்திற்கு அருகே குழப்பத்தை ஏற்படுத்த முயன்ற மூன்று நபர்கள் வீடியோ காட்சிகள் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இக்கூட்டத்தில் உள்துறை ஆலோசகர் முகமது ஜஹாங்கிர் ஆலம் சவுத்ரி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டாக்டர் கலிலுர் ரஹ்மான் மற்றும் பல்வேறு பாதுகாப்பு அமைப்புகளின் உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.