வங்கதேசம் அனைத்து சமுதாயங்களுக்கும் சொந்தமானது என தாரிக் ரஹ்மான் கூறியுள்ளார். முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகனான அவர், 17 ஆண்டுகளுக்குப் பின் தாயகம் திரும்பி, பி.என்.பி. கட்சியை தேர்தலுக்கு தயார்படுத்துகிறார். அவரது பேச்சு அரசியல் களத்தில் பெரும் கவனம் பெற்றுள்ளது.
இஸ்லாமியர்கள், இந்துக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வங்கதேசம் சொந்தம் என வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் அதிரடியாக பேசியுள்ளார்..இவரது பேச்சு தான் அரசியல் களத்தில் கவனம் ஈர்த்து வருகிறது..இந்தியாவுக்கு ஆதரவாக பேசினாரா பார்க்கலாம் இந்த காணொளியில்...
வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் போட்டியிட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுத்தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் உருவாகியுள்ளது.
இதையடுத்து வங்கதேசத்தில் அடுத்த முக்கிய கட்சியாக பி.என்.பி., எனப்படும் வங்கதேச தேசியவாத கட்சி உள்ளது. அக்கட்சியின் தலைவரான, முன்னாள் பிரதமர் கலிதா ஜியா, உடல்நலக் குறைவால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக எவர்கேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், அக்கட்சியின் செயல் தலைவரும், கலிதா ஜியாவின் மகனுமான தாரிக் ரஹ்மான் 17 ஆண்டுக்குப் பின், நேற்று தாயகம் திரும்பினார்.
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ஆட்சி காலத்தின் போது, பணமோசடி, ஷேக் ஹசீனாவை கொலை செய்ய சதி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிக்கியிருந்த அவர் லண்டனில் தஞ்சமடைந்தார். ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்க்கப்பட்ட பிறகு வந்த இடைக்கால அரசு அந்த வழக்குகளை ரத்து செய்தது.
இதையடுத்து தன் தாயை பார்க்கவும், தேர்தலுக்கு கட்சியை தயார்படுத்தவும், தாரிக் ரஹ்மான், தனது குடும்பத்துடன் நேற்று வங்கதேசம் திரும்பினார். இந்த நிலையில் தான் அவர் புர்பாச்சல் அருகே அவரை பார்க்க திரண்டிருந்த மக்களிடையே தாரிக் ரஹ்மான் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், அனைத்து சமூகங்கள் மற்றும் இனக்குழுக்களின் பங்கேற்புடன் அனைவரையும் உள்ளடக்கிய வங்கதேசத்தை உருவாக்க வேண்டும் என்றும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள் பவுத்தர்கள், இஸ்லாமியர்கள் என அனைவருக்கும் வங்கதேசம் சொந்தமானது என்றார்..
தொடர்ந்து பேசிய அவர், வங்கதேச நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் தேவையான திட்டம் என்னிடம் உள்ளது என்றும், வங்கதேசத்தில் அமைதி, ஒழுக்கம் மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையைக் கொண்டுவர பி.என்.பி., கட்சி அயராது பாடுபடும் என சூளுரைத்தார்..அதுமட்டுமின்றி, ஒவ்வொரு பெண்ணும், ஆணும் குழந்தைகளும் பாதுகாப்பாக வீட்டை விட்டு வெளியே சென்று திரும்பும் நிலை ஏற்பட வேண்டும் என்றார். தாரிக் ரஹ்மானின் இந்த பேச்சு அரசியல் களத்தில் கவனம் ஈர்த்து வருகிறது..