இராமர் சிலை அவமதிப்பு தொடர்பாக, வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவில் இந்து அமைப்புகளும், பல்கலைக்கழக மாணவர்களும் திரண்டு ’ஜெய் ஸ்ரீராம்’ முழக்கங்களை எழுப்பி ஒரு மாபெரும் தீப்பந்தப் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
வங்கதேசத்தில் கடந்த 2024 ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, சிறுபான்மையினரான இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாகவே, தங்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தை உறுதிப்படுத்த கோரி இந்துக்கள் அங்கு தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், ராமர் படத்தை அவமதித்ததாகக் கூறப்படுவதைக் கண்டித்து, வங்கதேசத்தின் டாக்கா முழுவதும் மாபெரும் போராட்டங்கள் வெடித்துள்ளன. வங்கதேசத்தின் வடக்கு மாவட்டமான காய்பந்தா மாவட்டத்தின் பலாஷ்பாரியில் 81 அடி உயர ராமர் சிலை மற்றும் பிரம்மாண்ட கோயில் வளாகம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. இதற்கு அங்குள்ள தீவிர இஸ்லாமிய அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து மிரட்டல் விடுத்ததையடுத்து, பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
இந்தச் சூழலில், சமீபத்தில் அங்குள்ள ஒரு கும்பல் ராமர் சிலையின் மீது செருப்பு வீசி அவமதிப்பு செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது. இந்தச் சம்பவம் வங்கதேச இந்துக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ராமர் சிலை அவமதிப்புக்கு எதிராக டாக்காவில் உள்ள ஜெகந்நாத் பல்கலைக்கழகம் மற்றும் டாக்கா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இந்து மாணவர்கள் முதலில் போராட்டத்தைத் தொடங்கினர்.
இந்தப் போராட்டத்திற்கு இந்து மகாஜோத் அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது. டாக்காவின் முக்கிய சந்திப்பான ஷாபாக் பகுதியில் ஆயிரக்கணக்கான இந்துக்கள் மற்றும் மாணவர்கள் திரண்டனர். அங்கிருந்து தேசிய பிரஸ் கிளப் வரை கைகளில் தீப்பந்தங்களை ஏந்தி மாபெரும் பேரணி நடத்தினர். அவர்கள், 'ஜெய் ஸ்ரீராம்' என முழக்கமிட்டு, இந்த அவமதிப்புச் செயலுக்குப் பின்னால் இருப்பவர்களைக் கைது செய்யக் கோரினர். தாரிக் ரஹ்மான் தலைமையிலான பி.என்.பி. அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டிய போராட்டக்காரர்கள், இதில் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்யக்கோரி 72 மணி நேர கெடுவை விடுத்தனர்.
இந்த கெடுவை நிறைவேற்றாவிட்டால், மேலும் பேரணிகள் மற்றும் போராட்டங்கள் நடத்தப்படும் என இந்து சமூகம் எச்சரித்துள்ளது. இதற்கிடையில், ராமர் சிலை கட்டும் பணியை மீண்டும் தொடங்க அனுமதிக்காவிட்டால், வங்காளதேசத்தின் 64 மாவட்டங்களிலும் ஒவ்வொன்றாக ராமர் கோயில்களைக் கட்டுவோம் என்று இந்து மகாஜோத் அமைப்பு திட்டவட்டமாகக் கூறியது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் வங்கதேசத்தில், இந்தச் சம்பவம் சிறுபான்மையினர் உரிமைகள் குறித்த கவலைகளை மீண்டும் எழுப்பியுள்ளது.