வங்கதேசம் எக்ஸ் தளம்
உலகம்

ISKCON வங்கிக்கணக்குகள் முடக்கம்|மீண்டும் இந்து கோயில்கள் மீது தாக்குதல்.. வங்கதேசத்தில் நடப்பதென்ன?

வங்கதேசத்தில் மீண்டும் நேற்று 3 இந்துக் கோயில்கள் தாக்கப்பட்டுள்ளன.

Prakash J

வங்கதேசத்தில் இந்து மதத் தலைவர் கைது

அண்டை நாடான வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராகப் போராட்டம் வெடித்தது முதல் தற்போதுவரை, சிறுபான்மையினரான இந்துக்களுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல் சம்பவங்கள் நிகழ்வதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இதில் அவர்களின் வழிபாட்டுத் தலங்கள், வீடுகள், சொத்துகள், உடைமைகள் சேதமாக்கப்படுகின்றன. அந்த வகையில், சிறுபான்மையினருக்கு ஆதரவாக இந்து சமூகத்தினர் நடத்திய போராட்டங்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாக, சம்மிலிதா சனாதானி ஜோட் என்ற இந்து அமைப்பின் தலைவரான ஸ்ரீசின்மோய் கிருஷ்ண தாஸ் வங்கதேச அரசால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு இந்திய அரசு கண்டனம் தெரிவித்திருந்தது. அதேநேரத்தில், இந்து மதத் தலைவர் கைது தொடர்பாகவும் இதற்கு நீதி கேட்டும் வங்கதேசத்தில் ஆங்காங்கே நடைபெறும் போராட்டங்களில் வன்முறை வெடித்துள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் பாதுகாப்புப் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். இது ஒருபுறமிருக்க, மறுபுறம், சட்டோகிராமில் உள்ள இந்துக் கோயிலை மர்மக் கும்பல் தாக்கியது. இது, மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து கிருஷ்ணா உணர்வுக்கான சர்வதேச சங்கத்தின் (ISKCON) செய்தித் தொடர்பாளர் ராதாரம் தாஸ், அந்த தாக்குதலுக்குள்ளான வீடியோவை பகிர்ந்து, “வங்காளதேசத்தில் இந்துக்கள் மற்றும் இந்து வழிபாட்டுத் தலங்கள் மீது 24x7 தாக்குதல்கள் நடைபெறுகின்றன. இது எப்போது நிறுத்தப்படும்?” எனக் கேள்வி எழுப்பியிருந்தார். மேலும், இந்தியா உதவி செய்ய வேண்டும்” எனவும் அவர் வலியுறுத்தி இருந்தார்.

இஸ்கான் - மத அடிப்படைவாத குழு

இதற்கிடையே, இஸ்கான் (ISKCON) அல்லது கிருஷ்ணா உணர்வுக்கான சர்வதேச சங்கத்தை, ’மத அடிப்படைவாத குழு’ என வங்கதேச அரசு தெரிவித்துள்ளது. மேலும் அச்சங்கத்தை தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாகவும் அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தேச துரோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இஸ்கானுடன் தொடர்புடைய அதன் முன்னாள் உறுப்பினர் சின்மோய் கிருஷ்ண தாஸ் உட்பட 17 பேரின் வங்கிக் கணக்குகளை 30 நாட்களுக்கு முடக்க வங்கதேச அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். பங்களாதேஷ் நிதி நுண்ணறிவு பிரிவு (BFIU), வெவ்வேறு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு இந்த உத்தரவுகளை அனுப்பியுள்ளது.

இந்த கணக்குகள் தொடர்பான அனைத்து வகையான பரிவர்த்தனைகளையும் ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், மத்திய பங்களாதேஷ் வங்கியின் கீழ் உள்ள நிதிப் புலனாய்வு நிறுவனம், இந்த 17 நபர்களுக்குச் சொந்தமான அனைத்து வணிகங்கள் தொடர்பான கணக்குகளின் புதுப்பிக்கப்பட்ட பரிவர்த்தனை அறிக்கைகள் உள்ளிட்ட தகவல்களை அடுத்த மூன்று வேலை நாட்களுக்குள் அனுப்புமாறு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை கேட்டுக் கொண்டுள்ளது.

நேற்று 3 இந்துக் கோயில்கள் மீது தாக்குதல்

இந்த நிலையில், வங்கதேசத்தில் உள்ள சட்டோகிராம் நகரில் நேற்று, மீண்டும் 3 இந்துக் கோயில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த நகரின் பதா்கட்டா பகுதியில் அருகருகே உள்ள 3 இந்து கோயில்கள் மீது நூற்றுக்கணக்கானோா் செங்கற்களை வீசி தாக்கியுள்ளனர்.

சாந்தனேஸ்வரி மாத்ரி கோயில், ஷோனி கோயில் மற்றும் சாந்தனேஸ்வரி காளிபாரி கோயில் ஆகிய கோயில்கள் சேதாரமாகியுள்ளன. ”ஜூமா தொழுகைக்குப் பிறகு நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் அங்கு வந்து இந்து மற்றும் இஸ்கான் அமைப்புக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பத் தொடங்கியதுடன் தாக்கவும் செய்தனர். நிலைமை மோசமடைந்தபோது, ​​நாங்கள் இராணுவத்தை அழைத்தோம், அவர்கள் விரைந்து வந்து நடவடிக்கை எடுத்தனர்” என உள்ளூர் இந்துமத தலைவர் தபன் தாஸ் தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்தில் இதுவரை இந்துக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள்!

கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி, வங்காளதேசத்தின் மைமென்சிங் மாவட்டத்தில் உள்ள கௌரிபூர் நகரில் துர்கா தேவி மற்றும் பிற இந்துக் கடவுள்களின் சிலைகள் சேதப்படுத்தப்பட்டன.

’இன்சாப் கீம்காரி சத்ரா-ஜந்தா’ என்ற இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு, டாக்காவின் செக்டார் 13ல் உள்ள ஒரு விளையாட்டு மைதானத்தை பூஜைக்காக பயன்படுத்திய இந்துக்களுக்கு எதிராக அணிவகுப்பு நடத்தியது.

கடந்த அக்டோபர் 11ஆம் தேதி வங்கதேசத்தின் டாக்கா நகரில் உள்ள தந்தி பஜார் பகுதியில் உள்ள துர்கா பூஜை மண்டபத்தின்மீது பெட்ரோல் குண்டு வீசியது.