பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணம் அரை நூற்றாண்டாக விடுதலை கோரி போராட்டம் நடத்தி வருகிறது. தற்போது, இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட பலுசிஸ்தான் விடுதலை படையினர், தாங்கள் விடுதலை பெற்றுக்கொண்டதாக அறிவித்துள்ளனர்.
மேலும், ஐநா சபை தங்களை நாடாக அங்கீகரிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளதோடு, பலூசிஸ்தானின் தூதரகத்தை டெல்லியில் அமைக்க அனுமதிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான தாக்குதல்கள் உச்சம் தொட்டிருந்த நாட்களில் உலகின் கவனம் ஈர்த்த ஒரு செய்தி, பாகிஸ்தான் படைகள் மீதான பலுசிஸ்தான் விடுதலைப் படையின் தாக்குதல்கள்! .
பாகிஸ்தானின் மேற்கு பகுதியில் உள்ள இரு சமூக மக்கள் பாகிஸ்தானுக்கு எப்போது தலைவலிதான். ஒன்று பலுச்சுகள்; மற்றொன்று பஷ்டூன்கள். பலுச்சுகள் பலுசிஸ்தான் கனவிலும், பஷ்த்டூன்கள் பஷ்டூனிஸ்தான் கனவிலும் உள்ளவர்கள். பாகிஸ்தான் அரசின் ஆட்சிமொழியான உருது இவர்களுக்கு பிரதான மொழி இல்லை என்பதும், பலுசிஸ்தானியர்களுக்கு பலுச் மொழியும், பஷ்டூனியர்களுக்கு பஷ்டோ மொழியுமே பிரதான மொழிகள் என்பதும் முக்கியமான அம்சம். இந்த இரு சமூகங்களுமே பழங்குடித்தன்மை கொண்ட, ஆப்கன்- ஈரான் பண்பாட்டின் தாக்கம் கொண்ட, அதேசமயம் மிகுந்த தனித்துவமான சமூகங்கள்.
பாகிஸ்தான் தனி நாடாக அறிவிக்கப்பட்ட பிறகு பாகிஸ்தானுக்குள் வேண்டாவெறுப்புடன் ஒன்றுகலந்த சமூகங்கள் இவை. இரண்டு பிராந்தியங்களுமே பெரும் சமூக, பொருளாதார, அரசியல் புறக்கணிப்பை எதிர்கொள்பவை. இவற்றில் பலுச் சமூகம்தான் இன்று பாகிஸ்தானுக்குப் பெரும் தலைவலியாக உருவெடுத்திருக்கிறது.
ஆப்கானிஸ்தான்-ஈரான்-பாகிஸ்தான் எல்லையில் உள்ள பிராந்தியம் இது. பாகிஸ்தானுடைய நிலப்பரப்பில் 44% அளவுக்கு விரிந்திருக்கும் பலுசிஸ்தான் அதன் மிகப் பெரிய மாகாணம். ஆனால், பாலைவனம்சூழ் நிலமான பலுசிஸ்தானில் மக்கள் செறிவு குறைவு; ஆகையால், பாகிஸ்தானின் 25 கோடி மக்களில் 1.5 கோடி மட்டுமே கொண்ட பலுசிஸ்தானின் குரலுக்கான மதிப்பு குறைவு. அதேசமயம், ஈரான், ஆப்கன், சீனா போன்ற நாடுகளின் அண்மை உள்ளதால் வியூகரீதியாக கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிராந்தியம். பலுசிஸ்தான் விடுதலை ராணுவம், பலுசிஸ்தான் விடுதலை முன்னணி, சிந்துதேஷ் ரெவல்யூசனரி ஆர்மி, பலூச் ரிபப்ளிகன் கார்ட்ஸ், பலூச் தேசிய ராணுவம் என்று பல ஆயுத குழுக்கள் தனி நாடு முழக்கத்துடன் பலுசிஸ்தான் விடுதலைக்காக போராடிவருகின்றன.
இந்தியா 1971 போரை ஒட்டி எப்படி வங்கதேச விடுதலைக் குழுக்களுக்குத் துணையாக இருந்ததோ அப்படி பலுச் குழுக்களுக்கும் உதவ வேண்டும் என்ற குரல் இந்தக் குழுக்கள் மத்தியில் ஒலிக்கிறது; ஏற்கெனவே இந்தக் குழுக்களின் செயல்பாடுகளுக்கும், தாக்குதல்களுக்கும் பின்னணியில் இந்தியா இருக்கிறது என்ற குரல் பாகிஸ்தான் அரசு தரப்பில் ஒலிக்கிறது. இத்தகைய சூழலில் பலுசிஸ்தான் விடுதலை படைகளின் தாக்குதல்கள் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகின்றன.
இந்த வருடம் மார்ச் 11 அன்று, ஜாஃபர் எக்ஸ்பிரஸ் என அழைக்கப்படும் ரயிலை பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் கடத்தியது பாகிஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ராணுவ வீரர்கள் உள்ளிட்ட 400 பேரை பணயக் கைதிகளாக பிடித்து, பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அதிரவைத்தது. பாகிஸ்தான் ராணுவம் மற்றும் பாதுகாப்பு படைகள் அந்த ரயிலையும் மற்றும் அதன் பயணிகளையும் மீட்பதற்கு பெரும் பாடுபட்டது பாகிஸ்தான் ராணுவம். ராணுவ வீரர்கள் உள்ளிட்ட 21 பேர் உயிரிழந்தனர்.
அடுத்த அதிரடியாகத்தான் பாகிஸ்தான் படைகள் மீதான தாக்குதல் அறிவிப்பை வெளியிட்டது பலுச் படைகள். எது எப்படியாயினும், பாகிஸ்தான் படைகள் மீதான தாக்குதல் என்ற செய்தியின் மூலம் சர்வதேச கவனத்தை ஈர்த்திருக்கின்றன பலுச் அமைப்புகள். இந்தியாவுக்கு எதிராக காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் கையில் எடுப்பது போன்று இனி பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா கையில் எடுக்கும் விவகாரமாக பலுசிஸ்தான் மாறும் என்று சொல்கிறார்கள் சர்வதேச ராஜதந்திர விமர்சகர்கள்!