உலகம்

தட் மரணபீதி மொமண்ட்!.. சூட்கேஸை திறந்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Sinekadhara

குரோஷியாவிற்கு விடுமுறைக்குச் சென்று திரும்பிய பெண்ணுக்கு உயிர்பயத்தை காட்டியிருக்கிறது தன்னுடைய சூட்கேஸ். அப்படி என்ன இருந்தது அந்த சூட்கேஸில்?

ஆஸ்திரியாவின் நாட்டர்ன்பாக் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் விடுமுறை பயணமாக குரோஷியா சென்றுள்ளார். அங்கிருந்து சனிக்கிழமை தனது வீட்டிற்கு திரும்பிய அவர், தனது சூட்கேஸிலிருக்கும் பொருட்களை வெளியே எடுத்துள்ளார். அப்போது அவருக்கு மரண பயத்தை காட்டியிருக்கிறது அந்த சூட்கேஸ். அப்படி என்ன இருந்தது என்றுதானே கேட்கிறீர்கள்? ஒரு தேள் கொட்டினாலே வலி எப்படி இருக்கும் என்று நமக்கு தெரியும்... ஆனால், அந்த சூட்கேஸிற்குள் இருந்ததோ 18 தேள்கள். ஆம், அவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான்.

ஒரு தேள் தாய் தனது குட்டிகளுடன் அந்த சூட்கேஸிற்குள் அங்குமிங்கும் ஊர்ந்து விளையாடிக்கொண்டிருந்ததைப் பார்த்த அந்த பெண் அதிர்ச்சியில் உறைந்தே போயிருக்கிறார். இருப்பினும் நிலைமையை சுதாரித்துக்கொண்ட அந்த பெண், தேள்கள் தன்னை தாக்கிவிடாதவாறு கவனத்துடன் அவற்றை கையாண்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், அந்த தேள் குடும்பத்தை போட்டோ எடுத்து சமூக வலைதளங்களிலும் பகிர்ந்துள்ளார்.

இதனையடுத்து Tierhilfe Gusental என்ற விலங்குகள் மீட்பு நிறுவனத்தை தொடர்புகொண்ட அந்த பெண், தாய் தேள் மற்றும் குட்டிகளை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது. மேலும் அவற்றை அவர்கள் தாய்நாடான குரோஷியாவிலேயே விட்டுவிட முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து விலங்கு கட்டுப்பாட்டு பணியாளர் ஒருவர் கூறுகையில், ’’ஆஸ்திரியாவில் இதன் இனப்பெருக்கம் நன்றாக இருக்கும் என்றாலும் அவை இந்த நாட்டைச் சார்ந்தவை அல்ல’’ என்றார்.

உலகில் கிட்டத்தட்ட 2000 வகை தேள்கள் இருந்தாலும், அவற்றில் 30 முதல் 40 வகைகளே மனிதர்களை கொல்லும் அளவிற்கு மிகவும் விஷம் வாய்ந்தவையாக இருக்கின்றன.