ஆஸ்திரியாவில் 300 கிலோ எடையுடன் சிறையில் இருக்கும் கைதி ஒருவருக்கு, நாள் ஒன்றுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு மேல் செலவிடப்படும் நிலையில், இது அந்நாட்டில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
உள்ளூர் ஊடகங்கள்படி ஆஸ்திரியா நாட்டில், 29 வயது நபர் ஒருவரது வீட்டில், போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் பேரில், போலீசார் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆரம்பத்தில் அவர் வியன்னாவின் ஜோசப்ஸ்டாட் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அப்போது அவரது எடை தாங்காததால் (300 கிலோ) அவருக்கு வழங்கப்பட்ட கட்டில் முறிந்துபோயுள்ளது. இதையடுத்து அவர், தலைநகரிலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ள கோர்னியூபர்க் சிறைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு, அங்குச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரும்புக் கம்பிகளை வெல்டிங் செய்து பெரிய கட்டிலும், இவருக்காக கழிப்பறைகளும் கட்டப்பட்டுள்ளன. அவரது உடல்நிலையை கவனிக்க செவிலியரும் பணியமர்த்தப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே, அவருடைய பராமரிப்புச் செலவாக நாள் ஒன்றுக்கு ரூ.1.6 லட்சம் செலவிடப்படுவதாக அந்த நாட்டின் நீதித்துறை வெளியிட்டிருக்கும் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், மற்ற கைதிகளுக்கு ஒருநாளைக்கு 6,000 ரூபாய்தான் செலவு செய்யப்படுகிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது, அந்நாட்டில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சாதாரண குடிமகன், மருத்துவரைப் பார்க்க ஒரு மாதத்துக்கும் மேல் முன்பதிவு செய்து காத்திருக்கும் நிலையில் நாடு இருக்கிறது. ஆனால், ஒரு கைதிக்கு நாட்டின் வளம் மற்றும் குடிமக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறதே என்று பொதுமக்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள். சிறைக் கைதிகளுக்கான செலவுகள் மற்றும் சிறைப் பராமரிப்புக்காக மக்களின் வரிப்பணம் செலவிடப்படுவது குறித்து அந்நாட்டில் பெரிய விவாதமே வெடித்துள்ளது.