உலகம்

``இதுவல்லவா போனஸ்..” - ஊழியர்களுக்கு ரூ.82 லட்சம் போனஸ் கொடுத்து அசத்திய பாஸ் லேடி!

JananiGovindhan

உலகின் மிகப்பெரிய டெக் ஜாம்பவான்களாக இருக்கும் ஆப்பிள், மைக்ரோசாஃப்ட், மெட்டா, ட்விட்டர், அமேசான் போன்ற பல நிறுவனங்கள் தொடர்ந்து ஆட்குறைப்பு வேலைகளில் ஈடுபட்டிருக்கும் வேளையில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் நிறுவனர் ஒருவர் தன்னுடைய ஊழியர்களுக்கு கிறிஸ்துமஸ் போனசாக 1 லட்சம் அமெரிக்க டாலர் அதாவது 82 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் கொடுத்திருக்கிறார் என்ற செய்தி உலக அளவில் பெரும் வியப்பை உண்டு பண்ணியிருக்கிறது.

அதன்படி ஆஸ்திரேலியாவின் மிகவும் பிரபலமான இரும்பு தாது சுரங்கம் நடத்தும் ராய் ஹில் கம்பெனியின் எக்சிகியூட்டிவ் நிறுவனரான ஜினா ரைன்ஹார்ட்தான் தனது ஊழியர்களுக்கு லட்சக் கணக்கில் போனஸ் வழங்கியிருக்கிறார். போனஸ் அறிவிப்பு கொடுப்பதற்கு முன்பு தனது ஊழியர்களிடம் முக்கியமான அறிவிப்பு வெளியிட இருக்கிறேன் என அனைவரையும் மீட்டிங்கிற்கு வரச் செய்திருக்கிறார் ஜினா ரைன்ஹார்ட்.

உலகளவில் நடந்து வரும் பணி நீக்க நடவடிக்கையால் ஏற்கெனவே அச்சத்தில் இருந்த ராய் ஹில் நிறுவன ஊழியர்கள் ஜினா மீட்டிங் என்றதும் மீண்டும் பதறிப்போயிருக்கிறார்கள். ஆனால் ஜினாவோ தனது ஊழியர்கள் 1 லட்சம் டாலர் போனஸ் கொடுப்பதாக அறிவித்து அவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறார். இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் போனஸ் கொடுக்கப்பட்ட 10 ஊழியர்களில் ஒருவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான் ஜினாவின் நிறுவனத்தில் சேர்ந்தவராம்.

கிட்டத்தட்ட 34 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர் சொத்துகளுக்கு அதிபதியாக இருக்கும் ஜினா ரைன்ஹார்ட் தனது அப்பாவின் மறைவுக்கு பிறகு இந்த சுரங்கத்தை ஏற்று நடத்தி வருகிறாராம். கடந்த ஆண்டு ராய் ஹில் நிறுவனத்துக்கு நல்ல வருமானம் கிடைத்த நிலையில் தற்போது ஊழியர்களுக்கு போனஸ் கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார் ஜினா. ஜினா ரைன்ஹார்ட்டின் இந்த அதிரடி போனஸ் அறிவிப்பு ஆட்குறைப்பில் ஈடுபட்டு வரும் உலகின் பிற நிறுவனங்களுக்கே சவால் விடும் வகையில் அமைந்திருக்கிறது.