உலகம்

ஆஸ்திரேலிய டாலர் நோட்டில் இருந்து இரண்டாம் எலிசபெத் மகாராணியின் உருவப் படம் நீக்கம்

JustinDurai

ஆஸ்திரேலியாவில் புதிதாக அச்சிடப்படும் 5 டாலர் நோட்டுகளில் மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் உருவப் படத்தை மாற்ற உள்ளதாக அறிவித்துள்ளது அந்நாட்டு ரிசர்வ் வங்கி.   

ஆஸ்திரேலிய அரசு அண்மைக் காலமாக, பழங்குடிகள் வரலாற்றுக்கு  முக்கியத்துவம் அளித்து வருகிறது. அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் இனி புதிதாக அச்சிடப்படும் 5 டாலர் நோட்டுகளில் மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் உருவப் படத்தை மாற்ற உள்ளதாகவும், இதற்கான ஒப்புதலை அரசு வழங்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளது ரிசர்வ் வங்கி. இரண்டாம் எலிசபெத் மகாராணியின் உருவப் படத்துக்கு பதிலாக பழங்குடி கலாச்சாரத்தின் வரலாற்றைப் பிரதிபலிக்கும் சின்னம், 5 டாலர் நோட்டில் இடம்பெறும் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

ஆஸ்திரேலிய நாட்டின்  அரச தலைவர் என்ற முறையில், ராணி இரண்டாம் எலிசபெத் பலமுறை அந்நாட்டிற்கு பயணித்திருக்கிறார். ஆஸ்திரேலிய மக்களுடன் இவருக்கு நெருங்கிய நட்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த 1999-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் தலைவர் பதவியில் இருந்து ராணியை நீக்குவதற்கான பொதுமக்கள் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. எனினும், அது பின்னர் தோற்கடிக்கப்பட்டது. ராணி மறைவை அடுத்து ஆஸ்திரேலியாவின் தலைவராக அரசர் 3-ம் சார்லஸ் அறிவிக்கப்பட்டார்.

ஆஸ்திரேலியாவில் கடந்த 2021இல் பழங்குடிகளுக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் அந்நாட்டின் தேசிய கீதத்தில் மாற்றம் செய்யப்பட்டது. ஆங்கில காலனி ஆதிக்கத்திலிருந்து ஆஸ்திரேலியாவின் வரலாறு தொடங்குவதாக தேசிய கீதத்தில் அா்த்தம் தந்த வாா்த்தை நீக்கப்பட்டது. ஆஸ்திரேலிய தேசிய கீதத்தில் நாங்கள் இளமையாகவும் சுதந்திரமாகவும் இருக்கிறோம் என்ற தொடருக்கு பதிலாக, 'நாங்கள் அனைவரும் ஒன்று மற்றும் சுதந்திரமானவர்கள்' என்ற வரி சேர்க்கப்பட்டது.