கடல் சீற்றம் காரணமாக ஜிபூட்டியில் இருந்து ஏமன் நோக்கி பயணித்த 350-க்கும் மேற்பட்ட அகதிகள் கப்பல் விபத்தில் சிக்கினர். 109 பேர் உயிரிழந்த நிலையில், 116 பேரின் நிலை தெரியவில்லை. மீட்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
செய்தியாளர் - கார்த்திகேயன்
போர், பஞ்சம், வேலைவாய்ப்பின்மை போன்ற பிரச்சனைகள் எங்கெல்லாம் ஏற்படுகிறதோ, அந்த நாட்டில் உள்ள மக்கள் பெரும் பிரச்சனைகளை சந்திப்பார்கள். அந்த பிரச்சனை அளவை மீறி பொதுமக்களை தண்டித்தால், அவர்கள் வேறு வழியே இல்லாமல், வேறு நாடுகளுக்கு சட்டவிரோதமாக சென்று, அகதிகளாக வாழ முற்படுவார்கள். அப்படியான நிலை தான், தற்போது எத்தியோப்பியா நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நாட்டில், மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, பொதுமக்கள் அனைவரும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.
இதனால், இந்த நாட்டை சேர்ந்த 350-க்கும் மேற்பட்டோர், கடல் வழியாக ஏமன் நாட்டிற்கு செல்ல முயன்றுள்ளனர். ஆனால், ஏற்கனவே பெரும் துயரத்தில் இருந்த அந்த மக்களுக்கு, தற்போது மற்றொரு மோசமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது, கிழக்கு ஆப்ரிக்க நாடான ஜிபூட்டியில் இருந்து ஏமன் நாட்டை நோக்கி, சுமார் 350-க்கும் மேற்பட்ட அகதிகள், சட்டவிரோதமாக கப்பல் ஒன்றில் பயணித்துள்ளனர். ஜிபூட்டியின் கடலோர நகரமான ஒபோக் அருகே வந்தபோது, அந்த கப்பல் திடீரென கடலில் மூழ்கி, பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. கடல் சீற்றம் அதிகமாக இருந்ததும், கப்பலில் அதிகப்படியான மக்கள் பயணித்ததும் தான், இந்த விபத்துக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.
இதில், 15 குழந்தைகள் உட்பட 109 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 116 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை என, ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச புலம்பெயர்வு அமைப்பு தெரிவித்துள்ளது. அக்டோபர் 8-ம் தேதியில் இருந்து 9-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் இந்த விபத்து நடந்திருந்தாலும், தற்போது தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்த கோர விபத்தில், 80-க்கும் மேற்பட்டோர் மட்டுமே அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிர் பிழைத்தவர்கள் மீட்கப்பட்டு, ஒபோக் பகுதியில் உள்ள புலம்பெயர்ந்தோர் மறுவாழ்வு மையத்தில் தங்க வைக்கப்பட்டு, மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், அவர்கள் தங்களது குடும்பத்தினரைத் தொடர்புகொள்ளவும் உதவிகள் செய்யப்படுகின்றன. கடலில் மாயமான மற்றவர்களை மீட்கும் பணியும், மிகவும் மும்மரமாக நடைபெற்று வருகிறது.