model image google gemeni
உலகம்

ஏமன் போர்.. உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடிய மக்கள்.. படகு கவிழ்ந்து 139 பேர் பலி!

உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அண்டை நாடுகளுக்குள் அகதிகளாக நுழையும் இந்த வழித்தடப் பயணத்தின் ஆபத்துகளை அவர்கள் உணர்வதே இல்லை என்பதே கவலைக்குரிய விஷயமாக உள்ளது.

Prakash J

ஏமனில் ஹவுதி அமைப்பினருக்கும் அரசு ஆதரவு படைகளுக்கும் இடையிலான போர் மற்றும் மோதல்கள் காரணமாக, லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர். இந்த நிலையில், 300க்கும் மேற்பட்டோரை ஏற்றிச் சென்ற படகு ஒன்று ஜிபூட்டி கடற்கரைக்கு அப்பால் கவிழ்ந்ததில்,139 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

2022-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை தலையிட்டு மத்தியஸ்தம் செய்ததன் பேரில் சவூதி அரேபியாவின் ஆதரவு பெற்ற ஏமன் அரசாங்கப் படைகளுக்கும் ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது. ஆனால், அந்த ஒப்பந்தம் நிராகதியான நிலையில், தற்போது இருதரப்புக்கும் இடையே தாக்குதல் அதிகரித்து வருகிறது. ஏற்கெனவே ஹவுதியின் தாக்குதலால், சவூதியின் எண்ணெய் வர்த்தகம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அந்நாட்டின் விமான நிலையங்களையும் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. அதேநேரத்தில், மெக்கா ஒப்பந்தத்தின்படி, துருக்கியும் பாகிஸ்தானும் சவூதிக்கு ஆதரவாகக் களமிறங்கி உள்ளன. போரின் பதற்றம் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.

Model image

போர் காரணமாக, ஏமனுக்குள் இதுவரை 45 லட்சம் முதல் 52 லட்சம் மக்கள் தங்களின் இருப்பிடங்களை இழந்து இடம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். அண்மைக்காலத்தில் மோதல்கள் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, 1,28,000-க்கும் அதிகமான மக்கள் புதிதாக இடம்பெயர்ந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து வெளியேறிய பெரும்பாலான மக்கள் ஏமனின் மாரிப், ஏடேன், லாஹிஜ், அபியான், அல் தாலே உள்ளிட்ட பாதுகாப்பான பிற நகரங்களிலும், தற்காலிக முகாம்களிலும் தங்கியுள்ளனர்.

அதேநேரத்தில், கடல் வழியாகவும் எல்லைப் பகுதிகள் வழியாகவும் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக மக்கள் தப்பிச் செல்கின்றனர். குறிப்பாக, செங்கடலைக் கடந்து மிக அருகில் உள்ள ஜிபூட்டிக்கு படகுகள் மூலம் ஆயிரக்கணக்கானோர் தப்பிச் செல்கின்றனர். தற்போதுவரை, அங்கு 4,000க்கும் மேற்பட்டோர் அங்குச் சென்றிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், 300க்கும் மேற்பட்டோரை ஏற்றிச் சென்ற படகு ஒன்று ஜிபூட்டி கடற்கரைக்கு அப்பால் கவிழ்ந்ததில், 15 குழந்தைகள் உட்பட குறைந்தது 139 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்ததாகவும், சுமார் 84 பேரைக் காணவில்லை என்றும் ஐக்கிய நாடுகளின் சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு (IOM)தெரிவித்துள்ளது.

Model image

ஜிபூட்டியில் உள்ள துறைமுக நகரமான ஒபோக்கிற்கு வடக்கே உள்ள குஹேரே அருகே, 305 பேரை ஏற்றிச் சென்ற படகு அக்டோபர் 8-9 இரவில் கவிழ்ந்ததாகவும், இந்த விபத்தில் சுமார் 82 பேர் மட்டுமே உயிர் தப்பியதாகவும் ஐ.நா. அமைப்பு கூறியுள்ளது. மேலும், ஜிபூட்டி அதிகாரிகள் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளைத் தொடர்ந்து வருவதாகவும், உயிர் பிழைத்தவர்களுக்கு மருத்துவ உதவி அளித்து வருவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அண்டை நாடுகளுக்குள் அகதிகளாக நுழையும் இந்த வழித்தடப் பயணத்தின் ஆபத்துகளை அவர்கள் உணர்வதே இல்லை என்பதே கவலைக்குரிய விஷயமாக உள்ளது.