உலகம்

ஈரானில் நிலநடுக்கம்: 129 பேர் பலி, 300 பேர் காயம்

ஈரானில் நிலநடுக்கம்: 129 பேர் பலி, 300 பேர் காயம்

webteam

ஈரான் நாட்டில் நேற்றிரவு நடந்த சக்தி வாய்ந்த நில நடுக்கத்தில் 129 பேர் உயிரிழந்தனர். 300 பேர் படுகாயமடைந்தனர். 

ஈரானில் வடக்கு எல்லைப் பகுதியில் உள்ளது ஹலப்ஜா நகரம். ஈராக் எல்லை அருகே உள்ள இந்நகரத்தில் இருந்து 32 கி.மீ தொலையில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7. 2 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கி சுமார் 129 பேர் பலியாயினர். 300-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அந்தப் பகுதியில் மீட்புப் படையினருடன் இணைந்து பொதுமக்களும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

’சுமார் 8 கிராமங்கள் இந்த நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டுள்ளன. மின் இணைப்பு பல இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளது.  ஈராக் எல்லை அருகே உள்ள பல மாகாணங்களில் நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது. இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது’ என்று ஈரான் நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்றும் தெரிகிறது.