உலகம்

ஏலத்துக்கு வருகிறது ஜேம்ஸ் பாண்ட் பயன்படுத்திய கார்

ஏலத்துக்கு வருகிறது ஜேம்ஸ் பாண்ட் பயன்படுத்திய கார்

webteam

ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்திற்காக கடந்த 1965ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ஆஸ்டான் மார்டின் கார் அடுத்த மாதம் ஏலத்திற்கு வருகிறது.

ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்திற்காக ஆஸ்டான் மார்டின் கார் நிறுவனம் பிரத்யேகமான முறையில் ஒரு காரை தயாரித்திருந்தது. திரைப்படத்தில் கதாநாயகனை விரட்டும் எதிரிகளை சமாளிப்பதற்காக அந்தக் காரில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் புகுத்தப்பட்டிருந்தன.

முன்பக்கத்தில் விளக்குகளில் இருந்து வெளியே வரும் துப்பாக்கி, நம்பர் பிளேட்டை மாற்றுவது, பின் பக்கத்தில் இருந்து ஆணிகளை பீய்ச்சி அடித்து துரத்தி வரும் கார்களின் டயர்களை பஞ்சராக்குவது என அந்தக் கார் சிறப்பாக தயாரிக்கப்பட்டிருந்தது. இவைதவிர காருக்குள் ரேடார், ஜிபிஎஸ் மற்றும் தொலைத்தொடர்பு வசதிகளும் இடம்பெற்றிருந்தன.

இந்த காரை பிரபல ஏல நிறுவனமான சோத்பி வரும் ஆகஸ்ட் 15ம் தேதி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஏலம் விடுகிறது. பழமையான காராக இருந்தாலும், நவீன காலத்துக்கு உகந்த வசதிகள் இதில் இடம் பெற்றிருப்பதால், காரை ஏலம் எடுக்க பலர் முண்டியடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.