brahmaputra river pti
உலகம்

பிரம்மபுத்திரா நீர் | பயமுறுத்திய பாகிஸ்தான்.. பதிலடி கொடுத்த அசாம் முதல்வர்!

பிரம்மபுத்திரா நீர் தொடர்பாக பாகிஸ்தான் கருத்து தெரிவித்ததற்கு, அசாம் முதல்வர் பதிலடி கொடுத்துள்ளார்.

Prakash J

பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதில் ஒன்று, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கிடையே, ”இந்தியா, பாகிஸ்தானுக்குச் செல்லும் சிந்து நதி நீரைச் தடுத்து நிறுத்தினால், சீனாவும் அதையே செய்ய முடியும். ஆனால் இதுபோன்ற விஷயங்கள் நடந்தால், முழு உலகமும் ஒரு போரில் சிக்கிவிடும்” என்று பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் மூத்த உதவியாளர் ராணா இஹ்சான் அப்சல் தெரிவித்தார்.

இதற்கு அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர், “காலாவதியான சிந்து நீர் ஒப்பந்தத்திலிருந்து இந்தியா தீர்க்கமாக விலகிய பிறகு, பாகிஸ்தான் இப்போது புதிய மிரட்டலை விடுத்துள்ளது. இந்தியாவிற்கு பிரம்மபுத்திராவின் தண்ணீரை சீனா நிறுத்தினால் என்ன செய்வது என்று அச்சுறுத்தி உள்ளது.

பிரம்மபுத்திராவின் மொத்த ஓட்டத்தில் சீனா 30 முதல் 35 சதவீதம் மட்டுமே பங்களிக்கிறது. மீதமுள்ள 65 முதல் 70 சதவீதம் இந்தியாவிற்குள் உற்பத்தி செய்யப்படுகிறது. அருணாச்சலப் பிரதேசம், அசாம், நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் பெய்யும் பருவமழையே இதற்குக் காரணம். சுபன்சிரி, லோஹித், கமெங், மனாஸ், தன்சிரி, ஜியா-பராலி, கோபிலி போன்ற முக்கிய துணை நதிகள் வழியாகவும், கிருஷ்ணாய், திகாரு மற்றும் குல்சி போன்ற ஆறுகள் வழியாகவும் காசி, காரோ மற்றும் ஜெயந்தியா மலைகளிலிருந்தும் கூடுதல் நீர்வரத்து கிடைக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “பிரம்மபுத்திரா நதி, இந்தியா மேல் நீரோட்டத்தைச் சார்ந்துள்ளது. இது மழையால் இயங்கும் இந்திய நதி அமைப்பு. இந்திய எல்லைக்குள் நுழைந்த பிறகு பலப்படுத்தப்படுகிறது. சீனா நீர் ஓட்டத்தை குறைக்கும் சாத்தியம் இல்லை. ஒருவேளை, நீர் ஓட்டத்தை சீனா குறைத்தாலும் உண்மையில் இந்தியாவுக்கு அசாமில் ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளத்தைத் தணிக்க உதவக்கூடும். இது ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்களை இடம்பெயர்த்து வாழ்வாதாரங்களை அழிக்கிறது.

இதற்கிடையில், சிந்து நீர் ஒப்பந்தத்தின் கீழ் 74 ஆண்டுகால முன்னுரிமை நீர் அணுகலைப் பயன்படுத்திக் கொண்ட பாகிஸ்தான், இப்போது இந்தியா தனது இறையாண்மை உரிமைகளை உரிமையுடன் மீட்டெடுப்பதால் பீதியடைந்துள்ளது. பிரம்மபுத்திரா நதி ஒரே ஒரு மூலத்தால் கட்டுப்படுத்தப்படவில்லை. மாறாக, அது நமது புவியியல், நமது பருவமழை மற்றும் நமது நாகரிக மீள்தன்மை ஆகியவற்றால் இயக்கப்படுகிறது" எனப் பதிலடி கொடுத்துள்ளார்.

இதன்மூலம், இந்தியாவை அச்சுறுத்த சீனாவைப் பயன்படுத்த வேண்டாம் என்று பாகிஸ்தானுக்கு ஹிமந்தா எச்சரித்துள்ளார். மேலும், பாகிஸ்தானைப் போலல்லாமல் இந்தியா பாதிக்கப்படக்கூடியது அல்ல என்பதையும் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளார். பிரம்மபுத்திராவின் உயிர்ச்சக்திக்காக இந்தியா சீனாவைச் சார்ந்திருக்கவில்லை என்றும், ஏனெனில் அது மழையை நம்பி, இந்தியாவால் வளர்க்கப்படும் அமைப்பாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.