Zaporizhzhia nuclear plant Reuters
உலகம்

அடுத்த செர்னோபிலாக மாறும் உக்ரைன்? ஆபத்தில் அணு உலைகள்!

உக்ரைனின் அணுமின் நிலையங்களில் மின்சார தடை: ஐரோப்பாவுக்கு அணுசக்தி பேரிடர் அபாயம்

PT WEB

உக்ரைனின் ஸபோரிஷியா அணுமின் நிலையத்தில் மின்சார இணைப்பு மீண்டும் மீண்டும் துண்டிக்கப்படுவதால், அணு உலைகள் உருகி கதிர்வீச்சுப் பேரிடர் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது. தற்காலிக ஜெனரேட்டர்களின் எரிபொருள் கையிருப்பு குறைவாக இருப்பதால், ஐரோப்பா முழுவதும் அணுசக்தி பேரழிவின் விளிம்பில் உள்ளது.

செய்தியாளார் - M.மீரா

ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையங்களில் ஒன்றான ஸபோரிஷியா, தற்போது ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்குள்ள ஆறு அணு உலைகளும் மின்சார உற்பத்தியை நிறுத்திவிட்டன. இருப்பினும், அணு உலைகளில் உள்ள எரிபொருள் அதிக வெப்பமடையாமல் குளிர்விப்பது உள்ளிட்ட பாதுகாப்புப் பணிகளுக்கு தொடர்ந்து மின்சாரம் தேவைப்படுகிறது.

ஆனால் ஸபோரிஷியா அணுமின் நிலையத்தில், வெளியிலிருந்து வழங்கப்படும் மின்சாரம் மீண்டும் மீண்டும் துண்டிக்கப்படுவதால் அணு உலைகளின் பாதுகாப்பு குறித்து சர்வதேச அளவில் கவலை எழுந்துள்ளது. வெளிப்புற மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவசரகால டீசல் ஜெனரேட்டர்கள் இயக்கப்பட்டு அணு உலைகளின் குளிரூட்டும் அமைப்புகள் செயல்பாட்டில் வைக்கப்பட்டு வருகிறது. இந்த ஜெனரேட்டர்களை இயக்குவதற்கான டீசல் கையிருப்பு சுமார் இரண்டு வாரங்களுக்கு மட்டுமே போதுமானது என சர்வதேச அணுசக்தி முகமை IAEA எச்சரித்தது.

இதனைத் தொடர்ந்து .உக்ரைன் மின் பொறியாளர்களால் இந்த மின் இணைப்பு சில மணிநேரங்களிலேயே வெற்றிகரமாக மீண்டும் சரிசெய்யப்பட்டுவிட்டது. இதனால் தற்காலிகமாகப் பேரழிவு தவிர்க்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய மின்சாரத் துண்டிப்புக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. அதேநேரத்தில், மின்சார இணைப்பு தானாகவே துண்டிக்கப்பட்டதாகவும், அணுமின் நிலையத்தில் கதிர்வீச்சு அளவுகள் இயல்பான நிலையில் இருப்பதாகவும் ரஷ்யா தெரிவித்திருந்தது.

Zaporizhzhia nuclear plant

சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) எச்சரித்தபடி, அணுமின் நிலையத்திற்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, அவசரகால டீசல் ஜெனரேட்டர்களை இயக்குவதற்கான எரிபொருள் இருப்பு இரண்டு வாரங்களில் தீர்ந்துபோனால் அணு உலைகள் உருகி மிக மோசமான கதிர்வீச்சுப் பேரிடர் (Nuclear Meltdown) ஏற்படும் அபாயம் உண்டாகும்.

முன்னதாக, செப்டம்பர் மாதம் IAEA ஏற்படுத்திய தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்தின் மூலம் பழுதுபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வெளிப்புற மின்சார இணைப்பு மீண்டும் சீரமைக்கப்பட்டது .

இவ்வாறு ஸபோரிஷியா அணுமின் நிலையத்தில் மீண்டும் மீண்டும் மின் இணைப்பு துண்டிக்கப்படுவது, எந்த நேரத்திலும் ஒரு பெரிய அணுசக்திப் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய தீவிர அச்சுறுத்தலாகும். தற்காலிக ஜெனரேட்டர்களை மட்டுமே நம்பியிருப்பது ஆபத்தானது. தொடர்ச்சியான இந்த மின்வெட்டுகள் அவசரகால உபகரணங்களைத் தேய்மானமடையச் செய்து, பாதுகாப்பு அமைப்புகளை முடக்குவதுடன், ஒட்டுமொத்த ஐரோப்பாவையும் கதிர்வீச்சு அபாயத்தின் விளிம்பிலேயே வைத்திருக்கிறது.

Zaporizhzhia nuclear plant

இதற்கிடையே, உக்ரைனின் எரிசக்தி கட்டமைப்புகளைக் குறிவைத்து ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் ட்னிப்ரோ (Dnipropetrovsk) மற்றும் கார்கிவ் பிராந்தியங்களில் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர். இதனால் சுமார் 2.5 லட்சம் மின் இணைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. மின்சார விநியோகத்தை மீண்டும் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

குளிர்காலம் நெருங்கி வரும் நிலையில், உக்ரைனின் மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகத்திலும் பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த சம்பவம் 1986ஆம் ஆண்டு செர்னோபில் அணு உலை விபத்து ஏற்பட்டு, அதனால் சுமார் 20 வகையான கதிர் வீச்சுப் பொருள்கள் காற்று மண்டலத்தில் கலந்த அபாயத்தை நினைவூட்டுகிறது.