அர்ஜென்டினாவின் அதிபராக ஜேவியர் மிலே உள்ளார். இவர் லிப்ரா என்ற கிரிப்டோகரன்சி குறித்து எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அதில் சிறு வணிகங்கள் மற்றும் தொடக்க நிறுவனங்களுக்கு நிதியளிக்க லிப்ரா உதவும் என குறிப்பிட்டு இருந்தார். மேலும் அதனை வாங்குவதற்கான இணைப்பையும் அதில் பகிர்ந்துகொண்டார். இதனால் அந்த பங்கின் விலை உயர்ந்தது. இதன்மூலம் கிரிப்டோகரன்சியை விளம்பரப்படுத்துவதாக கூறி அதிபருக்கு எதிர்ப்புகள் கிளம்பின.
இதைத் தொடர்ந்து அடுத்த சில மணி நேரத்தில், அந்த பதிவை நீக்கினார். இதனால் முதலீட்டாளர்கள் பலர் தங்களது பணத்தை இழந்தனர். இதனை தொடர்ந்து அதிபர் ஜேவியர் மிலேவை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும் நாடாளுமன்றத்தில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வரவும் எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
இந்த சூழலில் அர்ஜென்டினாவில் உள்ள வழக்கறிஞர்கள் அதிபருக்கு எதிராக மோசடி புகார்களை தாக்கல் செய்தனர். இதனிடையே அதிபர் ஜேவியர் மிலே மீதான மோசடி குற்றச்சாட்டுகளை விசாரிக்க நீதிபதி ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து தன்னை விடுவிக்குமாறும், தான் நல்லெண்ணத்துடன் செயல்பட்டதாகவும் அதிபர் ஜேவியர் மிலே தெரிவித்துள்ளார். தொடர்ந்து முதலீட்டாளர்களின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அவர், “நான் கிரிப்டோகரன்சியை விளம்பரப்படுத்தவில்லை. பதிவை மட்டும்தான் பகிர்ந்துகொண்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.
அதிபர் மீது வைக்கப்பட்டிருக்கும் இந்தக் குற்றச்சாட்டை அதிபர் மாளிகையும் மறுத்துள்ளது. எனினும், அவர் தவறான நடந்துகொண்டாரா என்பதை ஊழல் தடுப்பு அலுவலகம் தீர்மானிக்கும் எனத் தெரிவித்துள்ளது.