காஸா ராய்ட்டர்ஸ்
உலகம்

காஸாவில் என்ன செய்யணும்? | ட்ரம்ப்வுக்கு எதிராக எகிப்து மாற்றுத் திட்டம்; அரேபிய நாடுகள் ஒப்புதல்!

இஸ்ரேல்-ஹமாஸ் போரால் துண்டாடப்பட்டிருக்கும் காஸாவை, மறுகட்டமைப்பு செய்வதற்கு எகிப்து முன்வைத்துள்ள திட்டத்துக்கு அரேபிய நாடுகளின் தலைவர்கள் அனைவரும் ஒப்புதல் அளித்துள்ளதாக எகிப்து அதிபர் அப்துல் ஃபட்டா அல் சிசி தெரிவித்துள்ளார்.

PT WEB

2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி, இஸ்ரேல் மீது ஹமாஸ் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தியது. இதற்கு பழிவாங்கும் விதமாக காஸாவில் இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர். காஸா கடுமையாகச் சிதைந்துள்ளது.

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டம் தற்போது அமலில் உள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் காஸாவில் பாலஸ்தீனிய மக்கள் அனைவரையும் வெளியேற்றிவிட்டு அதனை ஒரு கடற்கரை சுற்றுலாத் தலமாக மாற்றலாம் என்ற திட்டத்தை முன்வைத்தார்.

ட்ரம்பின் திட்டத்துக்கு மாற்றாக எகிப்து ஒரு திட்டத்தை முன்வைத்துள்ளது. இந்தத் திட்டம் காஸாவில் உள்ள 20 லட்சம் பாலஸ்தீனியர்களை அகற்றாமல் 2030ஆம் ஆண்டுக்குள் காஸாவை மறுகட்டமைப்பு செய்வதற்கானது.

  • காஸாவில் குவிக்கப்பட்டுள்ள ஆயுதங்களை அகற்றுதல்,

  • இஸ்ரேலின் தாக்குதலால் ஏற்பட்ட இடிபாடுகளை அகற்றுதல்,

  • பாலஸ்தீனிய மக்களுக்கு புதிய வீடுகளைக் கட்டித் தருதல்,

  • வேளாண் நிலங்களை மறுசீரமைத்தல்,

  • புதிய தொழிற்சாலைகளை தொடங்குதல்,

  • விமான நிலையம் மற்றும் துறைமுகம் அமைத்தல் போன்ற பரிந்துரைகளை எகிப்தின் திட்டம் முன்வைக்கிறது.

காஸா

காஸாவில் இடைக்கால அரசுக்கு ஹமாஸ் அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்றும், இந்தத் திட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக எகிப்தில் நேற்று (மார்ச் 4) நடைபெற்ற கூட்டத்தில் கத்தார் அரசர், ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை அதிபர், சவுதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சர், பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ், ஐ.நா பொதுச் செயலளர் அந்தோணியோ குட்டரஸ் ஆகியோர் பங்கேற்றனர். ஆனால் காஸாவில் பாலஸ்தீன அரசு அமைவதை ஏற்காத இஸ்ரேலும், இஸ்ரேலை ஆதரிக்கும் அமெரிக்காவும், ஹமாஸ் ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தும் ஐக்கிய நாடுகள் அவையும், எகிப்தின் காஸா திட்டத்துக்கு ஒப்புதல் தருவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.