சூடானில் பிரதமர் ஹம்டோக் பதவி விலகியதைத் தொடர்ந்து ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்த வார தொடக்கத்தில் சூடான் பிரதமர் ஹம்டோக் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து நாடு மேலும் கொந்தளிப்பில் சிக்கியுள்ள நிலையில், இன்று ஆட்சிக்கவிழ்ப்புக்கு எதிராக அந்நாட்டு மக்கள் தலைநகர் கார்ட்டூம் மற்றும் பிற நகரங்களின் தெருக்களில் போராட்டத்தில் இறங்கினர்.
கடந்த ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி பிரதம மந்திரி அப்தல்லா ஹம்டோக் ராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு மூலமாக ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டார், அதன்பின்னர் நாட்டில் ஏற்பட்ட பதட்டங்கள் மற்றும் ஆட்சிக்கவிழ்ப்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை அமைதிப்படுத்துவதற்காக இராணுவத்துடனான ஒப்பந்தத்தைத் தொடர்ந்து ஒரு மாதம் கழித்து மீண்டும் பதவியில் அமர்த்தப்பட்டார் ஹம்டோக்.
அனால், ஆளும் ஜெனரல்களுக்கும் ஜனநாயக சார்பு இயக்கத்திற்கும் இடையில் ஒரு சமரசம் ஏற்படாததைத் தொடர்ந்து, அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் ஹம்டோக் ஞாயிற்றுக்கிழமை பதவி விலகினார். இதன்பின்னர், நாட்டில் ஜனாதிபதி மாளிகையைச் சுற்றியுள்ள பகுதி உட்பட தலைநகரில் பல இடங்களில் நடைபெறும் போராட்டங்களை கலைக்க பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி வருகின்றனர்.