செய்தியாளர்: வெற்றிச்செல்வி
இன்னும் 10 ஆண்டுகளில் cancer-ஐ குணப்படுத்த ai உதவும் என்ற ஆச்சரியமூட்டும் தகவல் வெளியாகி இருக்கிறது.. ஏஐ பல்வேறு துறைகளிலும் வேலைகளை எளிதாக்கும் நிலையில் தற்போது மருத்துவ துறையிலும் கால் பதிக்கிறது என்ற செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உண்மையிலேயே செயற்கை நுண்ணறிவால் இத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா? இதற்கான ஆராய்ச்சிகள் எந்த நிலையில் இருக்கின்றன? பார்க்கலாம்.
புற்றுநோய் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான குடும்பங்களைப் பாதிக்கும் ஒரு நோய். இதற்கு நிரந்தரத் தீர்வு கிடைக்குமா என்பதுதான் மருத்துவ உலகின் நீண்டகாலத் தேடலாக உள்ளது. இந்த சூழலில் தற்போது இந்த துறையிலும் ஏஐ பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது.
அந்த வகையில், எதிர்காலத்தில் புற்றுநோய் உள்ளிட்ட நோய்களை ஏஐ குணப்படுத்தும் என்கிற கணிப்பை வெளியிட்டிருக்கிறார் முன்னணி AI நிறுவனத்தின் CEO.
அமெரிக்காவைச் சேர்ந்த Anthropic நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டாரியோ அமோடி வெளியிட்டுள்ள இந்தக் கணிப்பு, மருத்துவ உலகில் கவனத்தை ஈர்த்துள்ளது. அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளுக்குள் செயற்கை நுண்ணறிவு மருத்துவத் துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, புற்றுநோய், அல்சைமர், இதய நோய் போன்ற தீவிர நோய்களுக்கான சிகிச்சைகளைக் கண்டுபிடிப்பதில் AI மிகப்பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதற்கான ஆராய்ச்சிப் பணிகளிலும் AI ஏற்கெனவே களமிறங்கிவிட்டது. Anthropic நிறுவனத்தின் Claude AI உதவியுடன், Generate Biomedicines உள்ளிட்ட 6 மருத்துவம் மற்றும் உயிரித் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து புதிய மருந்துகளைக் கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக, புற்றுநோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் CAR-T Cell Therapy முறையை மேலும் மேம்படுத்துவதற்கான ஆராய்ச்சியில் Claude AI பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சிகிச்சையில், நோயாளியின் உடலில் இருந்து T-Cells எனப்படும் நோய் எதிர்ப்பு செல்கள் எடுக்கப்படுகின்றன. பின்னர், புற்றுநோய் செல்களை அடையாளம் கண்டு தாக்கும் வகையில் அவற்றில் மரபணு மாற்றம் செய்யப்பட்டு, மீண்டும் நோயாளியின் உடலில் செலுத்தப்படுகின்றன.
இந்தச் செல்களின் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கான புதிய வழிமுறைகளைக் கண்டறிய AI உதவியுள்ளது. ஆய்வகப் பரிசோதனையில், புற்றுநோய் செல்களை அழிக்கும் திறன் சுமார் 10 மடங்கு அதிகரித்துள்ளது. இதுமட்டுமின்றி, BigHat Biosciences நிறுவனத்துடன் இணைந்து புற்றுநோய் செல்களை இலக்காகக் கொண்டு செயல்படும் ஆன்டிபாடி மருந்துகளை உருவாக்கும் ஆராய்ச்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதேபோல், Divergence Labs நிறுவனத்துடன் இணைந்து உணவு ஒவ்வாமைக்கான சிகிச்சையை உருவாக்கவும் AI பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக ஒரே மாதத்தில் சுமார் 35 ஆயிரம் ஆன்டிபாடி வடிவமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக Anthropic தெரிவித்துள்ளது. இதன் மூலம் பல ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும் மருந்து கண்டுபிடிப்புப் பணிகளை மிக வேகமாக மேற்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்த ஆராய்ச்சிகள் இன்னும் ஆரம்பக்கட்டத்தில்தான் உள்ளன. மனிதர்களிடம் மருத்துவப் பரிசோதனைகள் நடத்தி, அவற்றின் பாதுகாப்பையும் செயல்திறனையும் உறுதிப்படுத்த வேண்டியுள்ளது.