உலகம்

வேகமாக உருகும் அண்டார்டிகா பனிப்பாறைகள் - விஞ்ஞானிகள் கவலை

webteam

அண்டார்டிகாவிலுள்ள பனிப்பாறைகள் நாம் நினைத்ததை விட வேகமாக உருகி வருகின்றன என விஞ்ஞானிகள் மீண்டும் எச்சரித்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக கடல் மட்டத்தின் உயரம் அதிகரித்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு பனிப்பாறைகள் உருகுகின்றன.  பனிப்பாறை உருகுவதாலும்  கடல் மட்டம் உயர்கின்றது எனக் கூறப்படுகிறது. தற்போது அண்டார்டிகா பகுதியில் பனிப்பாறைகள் உருகும் வேகம் அதிகரித்துள்ளதாகவும் இது இப்படியே தொடர்ந்தால் பாதிப்பு கடுமையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் நாசாவின் நிதியுதவி பெறும் ஆராய்ச்சியாளர்கள், அண்டார்டிகாவில் உள்ள மிகப்பெரிய பனி பாலமான த்வைட்ஸ் பனிப்பாறை எப்படி உருகுகிறது என ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் முடிவில் த்வைட்ஸ் பனிப்பாறை இதற்கு முன்பு கணிக்கப்பட்டதை விட வேகமாக உருகி வருவதும் நிலையற்ற தன்மையுடன் இருப்பதும் தெரிய வந்துள்ளது. சிறிய பாதிப்பு ஏற்பட்டாலும் இது கடலில் கலந்து கடல் நீர்மட்டம் பெருமளவு உயரும் , அதாவது 3 அடி வரை நீர்மட்டம் உயரும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். இதன் விளைவுகள் மோசமாக இருக்கும் என்றும் கூறியுள்ளனர்.