iran Reuters
உலகம்

படையை குவித்த அமெரிக்கா.. ஈரானில் தரையிறங்கிய சீனா, ரஷ்ய மர்ம விமானங்கள்? யாருக்கு குறி?

அமெரிக்கா-ஈரான் மோதல் மத்தியில் சீனா, ரஷ்யா தொடர்பு புதிய சந்தேகத்தை கிளப்பியுள்ளது..

PT WEB

அமெரிக்கா-ஈரான் மோதல் தீவிரமடைந்த நிலையில், மர்ம விமானங்கள் ஈரானில் தரையிறங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமானங்கள் எங்கிருந்து வந்தது, யார் அனுப்பியது, அதன் நோக்கம் என்ன என்பது குறித்து தகவல்கள் வெளிவராததால், இது குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளன.

செய்தியாளர் - M.மீரா

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் 7 மாதங்களைக் கடந்தும் தொடர்ந்து வருகிறது. இந்த சூழலில், ஐ.நா. பொதுச்சபை கூட்டம் நடைபெற்றபோது, கத்தார் மூலம் அமெரிக்காவிடம் ஈரான் சமாதான பேச்சுவார்த்தைக்கான முன்மொழிவை வழங்கியது. ஆனால், இந்த முன்மொழிவை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஏற்கவில்லை என கூறப்பட்டது.

இதற்கிடையே செப்டம்பர் 28 ஆம் தேதி இங்கிலாந்தில் இருக்கும் RAF Fairford விமானப்படை தளத்தை குறிவைத்து தாக்க சதித் திட்டம் தீட்டப்பட்டதாக கூறப்பட்டது . இந்தச் சம்பவத்தின் பின்னணியில் ஈரான், ரஷ்யா அல்லது இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்களின் தொடர்பு ஏதேனும் இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இதனைத் தொடர்ந்து RAF Fairford விமான தளத்திலிருந்து குண்டுவீச்சு விமானங்களை திரும்பப் பெற அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

RAF Fairford airbase

மேலும் ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்கா - ஈரான் மோதல்கள தீவிரமடைந்து வருகிறது. இந்தசூழலில் Associated Press வெளியிட்ட தகவலின்படி, மத்திய கிழக்கில் அமெரிக்கா தனது ராணுவ பலத்தை மேலும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

இதற்காக சுமார் 9,000 கூடுதல் அமெரிக்க வீரர்களும், மூன்றாவது விமானம் தாங்கிக் கப்பலும் மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப், இடைக்காலத் தேர்தல்களுக்குப் பிறகு ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்படலாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் இரண்டு மர்ம விமானங்கள் ஈரானில் தரையிறங்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விமானங்கள் டிரான்ஸ்பாண்டரை ஆஃப் செய்த நிலையில் ஈரான் வான்வெளிக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது. விமானம் எங்கிருந்து வந்தது, யார் அனுப்பியது, அதன் நோக்கம் என்ன என்பது குறித்து உடனடியாக எந்தத் தகவலும் வெளியாகவில்லை. இந்த விமானங்களில் என்ன கொண்டு வரப்பட்டது? யார் அனுப்பினார்கள்? ஏன் ஈரானுக்கு வந்தன? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

iran war

இது குறித்து சமூக வலைதளங்களில் உறுதி செய்யப்படாத தகவல்கள் பரவின. அதில், ஒரு விமானம் C-130 ரக விமானம் என்றும், அது ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் உள்ள மெஹ்ராபாத் விமான நிலையத்தில் டிரான்ஸ்பாண்டர் ஆஃப் செய்யப்பட்ட நிலையில் தரையிறங்கியதாகவும் கூறப்பட்டது.

மேலும், துருக்கி வழியாக ஈரானுக்கு திருப்பி அனுப்பப்பட்டிருந்த முடக்கப்பட்ட ஈரான் நிதி இந்த விமானத்தில் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்றும் சில தகவல்கள் கூறின. ஆனால், இந்த தகவலை உறுதி செய்ய முடியவில்லை.

iran war

இதன்பிறகு மேலும் ஒரு மர்மம் உருவானது. மற்றொரு ராணுவ சரக்கு விமானமும் ஈரானில் தரையிறங்கியதாக தகவல் வெளியானது. அந்த விமானம் எங்கிருந்து வந்தது, எந்த நாட்டைச் சேர்ந்தது, யார் இயக்கியது என்பது தெளிவாக தெரியவில்லை.

அந்த விமானத்தில் என்ன கொண்டு வரப்பட்டது என்பது குறித்தும் உறுதியான தகவல் இல்லை. தற்போதைக்கு, இந்த விமானங்கள் எதற்காக ஈரானுக்கு வந்தன என்பது மர்மமாகவே உள்ளது. ஆனால், அவை வந்த நேரம்தான் தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது. இப்படியான சூழலில் இந்த இரண்டு விமானங்களும் சீனா மற்றும் ரஷ்யாவிலிருந்து வந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.