உலகம்

ஹெச்ஐவி பாதிப்பில் இருந்து குணமடைந்த அமெரிக்க பெண்- புதிய நம்பிக்கை என ஆய்வாளர்கள் கருத்து

Sinekadhara

ஸ்டெம் செல் அறுவை சிகிச்சை மூலம் அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் ஹெச்ஐவி பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளார்.

இது ஹெச்ஐவி தொடர்பான ஆய்வில் மிகப்பெரிய நம்பிக்கையை அளித்திருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நியூயார்க்கை சேர்ந்த 64 வயதான பெண்மணிக்கு கடந்த 2013ஆம் ஆண்டு ஹெச்ஐவி தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர், அதற்காக மருந்து எடுத்து வந்த நிலையில் 2017ஆம் ஆண்டு எலும்பு மஜ்ஜை புற்றுநோய் ஏற்பட்டது.

இந்நிலையில் அவருக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள், தொப்புள் கொடி ரத்தம் மூலம் சிகிச்சை அளித்துள்ளனர். இதில் அவரது உடலில் ஹெச்ஐவி தொற்றை எதிர்க்கும் தன்மை உண்டாகி அந்த பாதிப்பில் இருந்தும் குணமடைந்ததாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

14 மாதங்களாக அவரது உடல்நிலையை கண்காணித்ததில் தொற்று பாதிப்பு திரும்பவில்லை என்கின்றனர். ஹெச்ஐவி தொற்றுக்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். உலகிலேயே ஹெச்ஐவி தொற்றில் இருந்து குணமடைந்த மூன்றாவது நபர் இப்பெண் என்றும் தெரிவிக்கின்றனர்.