அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் விதிகளை மீறி முகக்கவசம் அணியாமல் மருத்துவமனைக்குள் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் மின்னசோட்டாவில் உள்ள பிரபல மருத்துவமனையை மைக் பென்ஸ் உள்ளிட்டோர் பார்வையிட்டுள்ளனர். நோயாளிகள், பார்வையாளர் என யாராக இருந்தாலும் பாதுகாப்பு உபகரணங்கள் அணிய வேண்டும் என்பது அந்த மருத்துவமனையின் விதிமுறை. ஆனால் அமெரிக்க துணை அதிபர் அதனை மீறி, முகக்கவசம் அணியாமல் சென்றுள்ளார். அவருடன் உடன் சென்ற மற்ற அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்தனர்.
முகக்கவசம் ஏன் அணியவில்லை என செய்தியாளர்கள் கேட்டதற்கு, தானும், தன்னைச் சுற்றியுள்ளவர்களும் அடிக்கடி கொரோனா பரிசோதனை செய்துகொள்வதாக மைக் பென்ஸ் பதில் அளித்தார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும், முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தி வரும் நிலையில், வெள்ளை மாளிகையின் கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்குழுவை வழிநடத்தி வருபவரே முக்கவசம் அணியாமல் மருத்துவமனைக்குள் சென்றது விவாதப் பொருளாக மாறியுள்ளது.