உலகம்

ட்ரம்ப் பயன்படுத்தும் குண்டு துளைக்காத ‘காடிலாக் ஒன்’ கார் : இத்தனை வசதிகளா?

webteam

அமெரிக்காவின் அதிபர் பயன்படுத்தும் கார்கள் தி பீஸ்ட் என அழைக்கப்படுகிறது.

ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம்தான் அமெரிக்க அதிபருக்கான பிரத்யேக காரை தயாரிக்கிறது. 115 ஆண்டுகள் பழமையான இந்த நிறுவனம் தயாரிக்கும் ‘காடில்லாக்’ என்ற சொகுசுக் காரின் வகையைச் சேர்ந்தது. இந்தக் காரின் முன்பகுதியில் இதற்கான முத்திரை இருக்கும். தற்போது அதிபர் ட்ரம்ப் பயன்படுத்திவரும் வாகனம் ‘காடிலாக் ஒன்’ என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கார் ஜிபிஎஸ் வசதி உள்ளிட்ட பல நவீனத் தொழில்நுட்பங்களைக் கொண்டிருக்கிறது. இதன் கண்ணாடியை நவீன இயந்திரத் துப்பாக்கிகளில் இருந்து வரும் குண்டுகளால்கூட துளைக்க முடியாது. காரின் கதவு உள்ளிட்டவை குண்டு துளைக்க முடியாத உலோகங்களால் தயாரிக்கப்பட்டிருக்கின்றன.

இரவு நேரத்தில், விளக்குகள் இல்லாமலும் காரை இயக்கும் வகையில் இருளில் பார்க்கும் கேமராக்கள் இந்தக் காரில் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றின் டயர்களும் பிரத்யேகமானவை. குட்ஈயர் நிறுவனம் தயாரிக்கும் இந்த டயர்கள் தாக்குதலின்போது சேதமடையாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. அதேபோல், ரசாயனத் தாக்குதல் நடத்தப்பட்டால்கூட, நச்சு வாயுக்கள் அதிபரை எட்டாத வகையில் கார் முற்றிலுமாகச் சீலிடப்பட்டுள்ளது. இதன் எரிபொருள் டாங்கும் வெடிகுண்டுகளால் சேதமடையாது. பின்புறத்தில் அதிபருக்குத் தேவையான முதலுதவி வசதிகள், பிராணவாயு, அவருடைய வகையைச் சேர்ந்த குறிப்பிடத் தகுந்த அளவு ரத்தம் போன்றவை வைக்கப்பட்டிருக்கும். ஓட்டுநருக்கு அருகில் நவீன ரகத் துப்பாக்கி ஒன்றும், பிற ஆயுதங்களும் வைக்கப்பட்டிருக்கும். இந்த காரை 180 டிகிரிக்கு திருப்பலாம்.

தற்போது அதிபர் ட்ரம்ப் பயன்படுத்தும் காரில் ஓட்டுநருடன் சேர்த்து மொத்தம் 4 பேர் பயணம் செய்யலாம். இதில் ஓட்டுநருக்கான பகுதியும் அதிபர் இருக்கும் பகுதியும் கண்ணாடி மூலம் பிரிக்கப்பட்டிருக்கும். அதிபர் வெளிநாடு செல்லும்போது, பிரத்யேக விமானம் மூலம் காரும் கொண்டு செல்லப்படுகிறது. உள்நாட்டில் இந்தக் கார் பயன்படுத்தப்படும்போது, ஒரு புறம் தேசியக் கொடியும், மறுபுறம் அதிபருக்கான பிரத்யேகக் கொடியும் கட்டப்பட்டிருக்கும். வெளிநாட்டுக்கு அதிபர் செல்லும்போது, அதிபருக்கான கொடிக்குப் பதிலாக, பயணம் மேற்கொண்டிருக்கும் நாட்டின் தேசியக் கொடி பயன்படுத்தப்படும்.