ஆண்டுதோறும் ஒரு மணி நேரம் மட்டுமே திறக்கும் எல்லை கதவுகளுக்கு இடையே தனது மெக்சிகோ காதலியை அமெரிக்கர் ஒருவர் கரம் பிடித்து திருமணம் செய்துள்ளார்.
மெக்சிகோ எல்லை வழியாக தனது நாட்டுக்குள் சட்டவிரோதமாக மக்கள் நுழைவதை தடுக்கும் வகையில், எல்லை முழுவதும் அமெரிக்கா இரும்பு கம்பி வேலிகளை அமைத்துள்ளது. இந்த இரும்பு கம்பி வேலிகளுக்கு மத்தியில் அமைக்கப்பட்டுள்ள கதவு ஆண்டுக்கு ஒரு முறை, ஒரு மணி நேரம் மட்டுமே திறக்கப்படுகிறது. அதன் வழியாக சென்று உறவினர்களை பரஸ்பரம் அமெரிக்க நாட்டினரும், மெக்சிகோ நாட்டினரும் பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த பிரயைன் ஹுஸ்டன் என்பவர், இந்த கதவு வழியாக சென்று மெக்சிகோவில் உள்ள தனது காதலி ஈவ்லியாவை திருமணம் செய்து கொண்டார். இந்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
சில காரணங்களுக்காக மெக்சிகோவுக்கு செல்ல முடியாததால், எல்லை கதவு வழியில் சென்று திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்ததாக ஹுஸ்டன் தெரிவித்துள்ளார். அத்துடன் தனது மனைவிக்கு விரைவில் அமெரிக்க விசா கிடைக்கும் என்றும், அதன் பிறகு இருவரும் சேர்ந்து வாழ்வோம் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.