உலகம்

“பயங்கரவாதிகளுக்கு பாக். புகலிடம் தரக்கூடாது” : அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை

“பயங்கரவாதிகளுக்கு பாக். புகலிடம் தரக்கூடாது” : அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை

webteam

இந்திய விமானப்படை வீரரான விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டார். இதனையடுத்து, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் இம்ரான் கான், நல்லெண்ண அடிப்படையில் எவ்வித நிபந்தனையுமின்றி அபிநந்தனை விடுவிக்கப்படுவார் என்று அறிவித்தார். அதன்படி பாகிஸ்தானின் ராவல் பிண்டி ராணுவ முகாமிலிருந்த அபிநந்தன் லாகூருக்கு நேற்று மாலை 4 மணியளவில் கொண்டு வரப்பட்டார். பின்னர்,வாகா எல்லைக்கு கொண்டு வரப்பட்ட அபிநந்தன் இரவு 9.20 மணிக்கு இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அப்போது அபிநந்தன் கம்பீர தோற்றத்துடன், மிடுக்காக நடந்து இந்திய எல்லையான அட்டாரி நோக்கி நடந்து வந்தார். அபிநந்தன் தாயகம் திரும்பியதை பார்த்தவர்கள் அங்கு கூடியிருந்தவர்கள் மட்டுமன்றி, ஒட்டுமொத்த தேசமும் அவரை வரவேற்று மகிழ்ந்தது.

இந்நிலையில் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் புகலிடம் தரக்கூடாது என்று பாகிஸ்தானுக்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அளித்த பேட்டியில், இந்திய விமானப் படை விங் கமாண்டர் அபிநந்தனை பாகிஸ்தான் விடுவிப்பதை வரவேற்பதாகத் தெரிவித்துள்ளார். ஐநா பாதுகாப்பு கவுன்சில் உறுதியின்படி, பயங்கரவாதிகளுக்கு தனது மண்ணில் பாகிஸ்தான் புகலிடம் அளிக்கக் கூடாது என்று மீண்டும் வலியுறுத்துவதாக அவர் கூறினார். அதோடு, பயங்கரவாத அமைப்புகளுக்கான நிதியையும் பாகிஸ்தான் முற்றிலும் தடுக்க வேண்டும் என்றும் அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்தியா, பாகிஸ்தான் இடையே இப்போது ஏற்பட்டுள்ள பதற்றத்துக்கு, பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் இந்தியாவில் நடத்திய புல்வாமா தாக்குதலே காரணம் என்று அமெரிக்க எம்.பி.க்கள் ஸ்டெனி ஹோயர் குற்றம்சாட்டியுள்ளார்.