வடகொரியாவை பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா மீண்டும் சேர்த்துள்ளது.
வடகொரியாவின் தொடர் அணுகுண்டு சோதனைகள் சர்வதேச நாடுகளின் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவிக்க, அமெரிக்கா-வடகொரியா இடையேயான கருத்து மோதல் முற்றி, போர் ஏற்படும் நிலைக்கு வந்துள்ளது. இதற்கிடையே அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னிற்கும் இடையேயான கருத்து மற்றும் கிண்டல் மோதல்களும் உச்சத்தை எட்டி வருகிறது.
இந்நிலையில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளின் பட்டியலில் வடகொரியாவை அமெரிக்கா மீண்டும் சேர்த்துள்ளது. இதுதொடர்பாக வெள்ளை மாளிகையில் நடந்த அமைச்சரவை கூட்டத்துக்குப் பின் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வடகொரியா மீது மேலும் சில புதிய தடைகளை விதிப்பது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவித்தார். அவரது இந்த முடிவை ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே வரவேற்றுள்ளார். கடைசியாக கடந்த 2008 ஆம் ஆண்டு பயங்கரவாத பட்டியலில் இருந்து வடகொரியாவின் பெயரை அப்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ் நீக்கி இருந்தார்.