உலகம்

ட்ரம்ப் - கிம் ஜாங்க் சந்திப்பு - உலகமே கவனிக்கும் சம்பவம்!

ட்ரம்ப் - கிம் ஜாங்க் சந்திப்பு - உலகமே கவனிக்கும் சம்பவம்!

webteam

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங்க் உன் பேச்சுவார்த்தை நடத்த ஐந்து இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

சர்வதேச நாடுகளின் எதிர்ப்புக்களையும் மீறி வடகொரியா ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டது. இதனால் வடகொரியாவை அமெரிக்கா எச்சரித்தது. அதன் அதிபர் ட்ரம்பும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னிற்கு எதிர்ப்பு தெரிவித்து, கண்டனங்களை வெளியிட்டார். அதைக் காதில் கூட வாங்காத கிம் ஜாங் மீண்டும் ஏவுகணை சோதனைகளை நடத்தினார். இதையடுத்து ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் கோரிக்கையால், ஐநா சபை வடகொரியாவை எச்சரித்தது. அதையும் கண்டுகொள்ளாத வடகொரியா, ஏவுகணையுடன் அணு ஆயுத சோதனையை மேற்கொண்டது. இதையடுத்து ட்ரம்ப் மற்றும் கிம் ஜாங் உன் இடையேயான வார்த்தைப் போர் வெடித்தது.

இதனால் சர்வதேச நாடுகள் மத்தியில் பதட்டமான சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் தென்கொரியா, வடகொரியாவுடன் நட்புறவை வளர்த்தது. அந்த நாட்டின் முயற்சியால் தற்போது அமெரிக்கா-வடகொரியா இடையே பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இந்நிலையில் ட்ரம்ப் மற்றும் கிம் சந்திப்பதற்காக 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.அதில் மங்கோலியா தலைநகரான உலான் பாடாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அது இரு கொரிய நாடுகளின் எல்லையில் உள்ள ராணுவம் விலக்கப்பட்ட பகுதி.

இதுதவிர ஐரோப்பிய நாடுகளில் ஸ்வீடன் அல்லது ஜெனீவா ஆகிய இடங்கள் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. தென் கொரியாவில் அமைந்துள்ள ஜிஜூ தீவில் நிறுத்தப்படும் சொகுசு கப்பலில் பேச்சுவார்த்தை நடத்தவும் வாய்ப்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் தென்கிழக்கு ஆசிய நாடுகளான மலேசியா அல்லது சிங்கப்பூரிலும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.