நவால்னி, ஜோ பைடன்
நவால்னி, ஜோ பைடன் ட்விட்டர்
உலகம்

நவால்னி மறைவு: ரஷ்யாவுக்கு புதிய தடைகளை விதிக்கப்போகும் அமெரிக்கா... உறுதியாய் சொன்ன ஜோ பைடன்!

Prakash J

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவரான அலெக்ஸி நவால்னி, அரசுக்கு எதிரான போராட்டங்களை ஒருங்கிணைத்து வந்ததுடன், அதிபர் புதினை கடுமையாக விமர்சித்தும் வந்தார். இந்த நிலையில், பல்வேறு வழக்குகளில் அவருக்கு 19 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் கடந்த 2021ஆம் ஆண்டுமுதல் அவர் சிறைத் தண்டனை அனுபவித்து வந்தார்.

இதற்கிடையே, கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி அவர் திடீரென சிறையிலேயே மரணமடைந்தார். அவரது உயிரிழப்புக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. நவால்னி மர்மமான முறையில் சிறையில் மரணம் அடைந்த சம்பவம் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நவால்னி மரணம் குறித்து அவரது மனைவி யூலியா நவல்னயா “எனது கணவரின் மரணச் செய்தி ரஷ்ய அரசிடமிருந்து வந்துள்ளதால் அதில் எனக்குச் சந்தேகம் உள்ளது. புதின் மற்றும் அவரது அரசை நம்பமுடியாது. அவர்கள் எப்போதும் பொய்யைத்தான் சொல்வார்கள். இதுகுறித்த உண்மையை உலகுக்கு வெளிக்கொண்டு வருவேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் நவால்னியின் மனைவி யூலியா நவல்னயாவை, இன்று (பிப்.23) கலிபோர்னியாவில் சந்தித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவருக்கு ஆறுதல் கூறினார். இந்தச் சந்திப்பை வெள்ளை மாளிகையும் உறுதி செய்துள்ளது.

joe biden

பின்னர் சந்திப்புக்குப் பேட்டியளித்த ஜோ பைடன், நவால்னியின் மறைவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, ரஷ்யாவின் பொருளாதாரம் மற்றும் தொழில்துறையை பாதிக்கும் வகையில் பல புதிய தடைகளை விதிக்கப்போவதாக தெரிவித்துள்ளார். ஏற்கெனவே ரஷ்யா, உக்ரைன் நாடு மீது தொடுத்துவரும் போரால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அதன்மீது பொருளாதாரத் தடை விதித்துள்ளன. நாளையுடன் (பிப்.24) உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் போர் இரண்டு ஆண்டுகளை நிறைவுசெய்ய இருக்கிறது.

நவால்னி மரணத்திற்குப் பின்னர், அதிபர் புதினுக்கு எதிராக ரஷ்யாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. ஏற்கெனவே உக்ரைன் போர் உள்ளிட்ட பிரச்னைகளால் மக்களிடம் அதிருப்தியைப் பெற்றுள்ள அதிபர் புதினுக்கு, எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னியின் மரணம் கூடுதல் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.