உலகம்

முடிவுக்கு வருமா இந்தியா - அமெரிக்கா பிரச்னைகள்? பிரதமருடன் மைக் பாம்பியோ சந்திப்பு 

webteam

டெல்லியில் பிரதமர் மோடியுடன் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ சந்தித்து பேசினார். 

சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றிருந்தார் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ. அதைத்தொடர்ந்து நேற்று இந்தியா வந்தார். 

இந்நிலையில் இன்று காலை பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ நேரில் சந்தித்தார். 

இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனென்றால் அமெரிக்கா - இந்தியா இடையே பெரும் பிரச்னை நிலவி வருகிறது. அதாவது அமெரிக்கா இந்தியா பொருட்களுக்கு அளித்து வந்த வரி விலக்கிற்கான ‘Generalised System of preferences’ என்ற அந்தஸ்த்தை ரத்து செய்தது. இதற்கு இந்தியாவும் அமெரிக்காவின் 28 பொருட்களுக்கான சுங்கவரியை அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து இந்தியா-அமெரிக்கா இடையேயான வர்த்தகம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டது. அத்துடன் இந்தியாவின் இரும்பு மற்றும் அலுமினியம் ஆகியவற்றுக்கு அமெரிக்கா இறக்குமதி வரியை அதிகரித்தது. இது இந்தயாவின் ஏற்றுமதியை பாதித்துள்ளது. 

எனவே பயங்கரவாத தடுப்பு, எச். 1 பி விசா தொடர்பாகவும் இருதரப்பு இறக்குமதி வரி விதிப்பு தொடர்பான பிரச்னைகள்,  தொடர்பாகவும் ஆரம்ப கட்டமாக ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரையும் வர்த்தகத்துறை அமைச்சரையும் மைக் பாம்பியோ சந்திக்க உள்ளார். 

வரும் 28 மற்றும் 29ம் தேதிகளில் ஜப்பானில் நடைபெறும் ஜி 20 நாடுகளின் கூட்டத்திற்கு இடையே அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில் அதற்கு முன்னதாக இச்சந்திப்பு நடைபெற்றுள்ளது.