உலகம்

'கிரீன் கார்டு' கட்டுப்பாடுகளை தளர்த்துகிறதா அமெரிக்கா?

jagadeesh

அமெரிக்காவில் கிரீன் கார்டு விசா எண்ணிக்கை கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இந்தியர்கள் உள்ளிட்ட ஏராளமான வெளிநாட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். எனினும் அதில் சிலருக்கு மட்டுமே அமெரிக்காவில் நிரந்தரமாக வசிப்பதற்கான கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு நாட்டுக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே கிரீன் கார்டு ஒதுக்கப்படும் என்பதால் அதற்காக விண்ணப்பித்து பல ஆயிரம் இந்தியர்கள் அமெரிக்காவில் காத்துள்ளனர்.

இந்நிலையில் கிரீன் கார்டுகளுக்கான எண்ணிக்கை வரம்பை அகற்ற வழிவகுக்கும் மசோதாவை நீதித்துறைக்கான அமெரிக்க எம்பிக்கள் குழு நிறைவேற்றியுள்ளது. குடும்பம் சார்ந்த குடியேற்றங்களுக்கான விசாக்கள் எண்ணிக்கையை 7இல் இருந்து 15ஆக அதிகரிக்கவும் அக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. திறமையாளர்களை தக்க வைத்துக்கொள்வதற்கான நோக்கிலேயே இம்மசோதா கொண்டு வரப்படுவதாக அக்குழுவின் உறுப்பினர் ஜோ லாஃப்கிரன் தெரிவித்தார்.

அடுத்து இம்மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அதிபரின் ஒப்புதலை பெற்ற பின் சட்டமாக மாறும். இம்மசோதா சட்டமாக மாறுவது மூலம் அமெரிக்காவில் கிரீன் கார்டுக்காக பல ஆண்டுகளாக காத்திருக்கும் இந்தியர்கள், சீனர்கள் அதிகளவில் பலன் பெறுவர்