உலகம்

ஐஎஸ் அமைப்பின் தலைவரை கொல்ல உதவிய உளவாளி:  177 கோடி ரூபாய் பரிசு!

webteam

ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதியை கொல்ல உதவிய உளவாளிக்கு இந்திய மதிப்பில் 177 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளது. 

பயங்கரவாத தாக்குதல்களில் மூளையாக செயல்பட்ட பக்தாதியை, பல ஆண்டுகளாக அமெரிக்க ராணுவம் தீவிரமாக தேடி வந்தது. இந்நிலையில் வடமேற்கு சிரியாவில் அவர் இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் அமெரிக்க சிறப்பு அதிரடி படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ராணுவம் சுற்றிவளைத்ததை உணர்ந்த பக்தாதி, தனது உடலில் கட்டப்பட்டிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து உயிரிழந்தார். பக்தாதியின் உயிரிழப்பை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.

அவரது உடல் கடலில் வீசப்பட்டதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்தது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு உதவியது ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த ஒருவர் என்பது தெரியவந்துள்ளது. ரகசிய உளவாளியாக செயல்பட்டுவந்த அவர், பக்தாதி குறித்த தகவல்களை தொடர்ந்து வழங்கி வந்துள்ளார். அவருக்கு அமெரிக்க ராணுவம் 177 கோடி ரூபாய் பரிசாக வழங்கவுள்ளது. 

அவரது உறவினர் ஒருவரை ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு கொலை செய்ததாகவும், அதற்கு பழி தீர்த்துக்கொள்‌ளவே அவரும் ஐஎஸ் அமைப்பில் இணைந்து பக்தாதியை காட்டிக்கொடுத்ததாகவும் கூறப்படுகிறது