கனடாவில் அக்டோபர் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அந்நாட்டின் பிரதமராக இருக்கும் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எதிராக எதிர்ப்புகள் கிளம்பின. இதனால், அவருக்கு ஆதரவு அளித்து வந்த என்.டி.பி. கட்சியும் தனது ஆதரவை விலக்கிக் கொண்டது. இதையடுத்து அவருக்கு நெருக்கடி அதிகரித்தது. மேலும், அவரது சொந்த லிபரல் கட்சிக்குள்ளேயே அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை அதிகரிக்கத் தொடங்கியது.
இந்த நிலையில், லிபரல் கட்சியின் தலைவர் பதவியில் இருந்தும் பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்த ட்ரூடோ, கட்சித் தலைவர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். என்றாலும், அடுத்த பிரதமர் தேர்வு செய்யப்படும்வரை தொடர்ந்து பதவியில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நாளை நடைபெறும் கட்சிக் கூட்டத்தில் புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், ஜஸ்டின் ட்ரூடோவின் ராஜினாமா அறிவிப்பை அந்நாட்டு மக்கள் கொண்டாடி வருகின்றனர். அதிலும் அமெரிக்காவைச் சேர்ந்த துரித உணவகம் ஒன்று, இதை வர்த்தகரீதியாகக் கொண்டாடி வருகிறது. ஆம், அந்த உணவகம் தமது வாடிக்கையாளர்களுக்கு டாலர் 2 (இந்திய ரூபாயில் 171.48) மதிப்பில் பர்கரை சிறப்புச் சலுகையில் வழங்கி வருகிறது.
இதுகுறித்த ‘டெய்ரி குயின் கிரில் & சில்’ என்ற துரித உணவகத்தின் விளம்பரங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்தச் சேவையை, பலர் தங்களுக்கு அருகிலுள்ள டெய்ரி குயின் விற்பனை நிலையங்களுக்குச் சென்று சலுகையை சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டாலும், மற்றவர்கள் இது கிடைக்காமல் கவலையடைந்துள்ளனர்.
1940ஆம் ஆண்டு நிறுவப்பட்ட டெய்ரி குயின் (DQ), ஒரு முழுநேர அமெரிக்க பன்னாட்டு துரித உணவு நிறுவனமாகும். இது, அமெரிக்காவைத் தவிர, பஹாமாஸ், பஹ்ரைன், புருனே, கம்போடியா, கனடா, சீனா, கயானா, இந்தோனேசியா, குவைத், லாவோஸ், மெக்சிகோ, பனாமா, பிலிப்பைன்ஸ், கத்தார், தாய்லாந்து, டிரினிடாட், டொபாகோ, வியட்நாம் ஆகிய நாடுகளிலும் செயல்பட்டு வருகிறது.