சர்வதேச நீதிமன்றத்தில் ஈரான் தொடர்ந்துள்ள வழக்கை சந்திக்க தயார் என அமெரிக்கா சவால் விடுத்துள்ளது.
ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை கைவிடுவதாக கடந்த மே மாதம் அறிவித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், மீண்டும் ஈரான் மீது முழுப் பொருளாதார தடைகளை விதித்தார். மேலும் ஈரானுடன், வர்த்தக உறவு வைத்துக் கொள்ளும் நாடுகளுக்கும் தடை விதிக்கப் போவதாக ட்ரம்ப் எச்சரித்தார். இதைத் தொடர்ந்து நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் கடந்த ஜூலை 16 ஆம் தேதி ஈரான் வழக்குத் தொடர்ந்தது. இவ்வழக்குக்கான விசாரணை நேற்று தொடங்கிய நிலையில், ஈரான் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. அப்போது அமெரிக்கா விதித்த தடை காரணமாக நாட்டின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், பலர் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
எனவே, ஈரானைக் காப்பாற்ற அமெரிக்கா விதித்த தடையை உடனடியாக நீக்க நீதிபதிகள் உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது. இதைத் தொடர்ந்து அமெரிக்கா சார்பில் வாதங்களை முன் வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி நாளை முதல் அமெரிக்கா அரசு தனது தரப்பு வாதங்களை முன் வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஈரான் தொடர்ந்துள்ள வழக்கை சந்திக்க தயாராக இருப்பதாக அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்காவுக்கு எதிராக தொடர்ந்து வழக்கு, தமது நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என்றும் கூறினார்.